தேர்தல் நடத்தை அமல்: முதல் நாளிலேயே அதிரடி காட்டிய போலீசார்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்வதை தடுக்கும் நோக்கில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வாகன சோதனை மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு செய்தனர்.
தேர்தல் அறிவிப்பின் போது பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர், தங்கள் முன்பு 4 பிரச்னைகள் மிகப்பெரிய சாவலாக உள்ளன என்றார். இதில், ஆள் பலம், பண பலத்தை முக்கிய பிரச்னைகளாக குறிப்பிட்டிருந்தார். எனவே, நாடு முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ரூ.50,000 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரம்பயம் பகுதியைச் சேர்ந்த கலைவாணன் என்பவர், தனது காரில் ரூ.4.80 லட்சம் எடுத்து வந்தது தெரியவந்தது. ஆனால், அவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் ஏதும் இல்லை.
இதேபோன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது காரில் ஆவணங்கள் இன்றி ரூ.1.03 லட்சம் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.5.83 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் குளித்தலை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குமலன்குட்டை வழியாக வந்த காரை மறித்து சோதித்ததில், டயர் கடை நடத்தி வரும் சசிக்குமார் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.2.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அந்த பணத்தை தேர்தல் கட்டுபாட்டு அறையில் ஒப்படைத்ததுடன், உரிய ஆவணங்களை காட்டி திரும்ப பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே, பறக்கும் படையினர் முறையாக செயல்படுகின்றனரா என கோவை அரசு மருத்துவமனை சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் இருவரும் நள்ளிரவில் ஆய்வு செய்தனர். அத்துடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளுமாறு அறுவுறுத்தினர்.
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து திருவாரூர் -நாகப்பட்டினம் எல்லையான காணூர் சோதனை சாவடியில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2,118 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட காவல் கண்கணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
யாழ். சாட்டி கடலில் மூழ்கி 11 வயது சிறுமி பரிதாப மரணம்!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் யாழ். விஜயம்!
எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 19 பேர் இன்று அதிகாலை கைது!