வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை வழக்கும் தள்ளுபடி – தமிழர்களின் தொடர் போராட்டத்துக்கு வெற்றி.
வெடுக்குநாறிமலை ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த 8 ஆம் திகதி மகா சிவராத்திரி பூஜை வழிபாட்டில் தமிழர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு சப்பாத்துக்கால்களுடன் உட்புகுந்த பொலிஸார், வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்ததுடன் ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைதான 8 பேரும் மறுநாள் 9 ஆம் திகதி வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 12 ஆம் திகதி வழக்கு மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, 19 ஆம் திகதி (இன்று) வரை பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய மேற்படி 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
விளக்கமறியலில் அவர்கள் வைக்கப்பட்டிருந்த நாட்களில் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு – கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பொலிஸார் அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிய காரணத்தால் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
கைதானவர்கள் சார்பாக என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார், நிவிதா, கிசான், தர்சா, நிதர்சன், கொன்சியஸ், சாருகேசி உள்ளிட்ட சட்டத்தரணிகள் பலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இதேவேளை, வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரின் விடுதலையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் பங்கேற்று தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
கைதானவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் நீதி அமைச்சர் வழங்கிய வாக்குறுதியையடுத்து போராட்டம் நிறைவுக்கு வந்திருந்தது.
கைதானவர்களின் விடுதலையையடுத்து சபையில் உரையாற்றிய சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி., “எமது போராட்டத்தையடுத்து நீதிமன்றத்தால் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி.” – என்றார்.