கல்வி அமைச்சுடன் மைக்ரோசொவ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்து
தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொவ்ட் நிறுவனத்திற்கும் இடையில் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் கைசாத்திடப்பட்டது.
20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளைத் தெரிவு செய்து தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவசியமான நவீன வகுப்பறைகளையும் தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்குவதாக இங்கு குறிப்பிடப்பட்டது.
அதன்படி கல்விச் செயற்பாடுகளை தொழில்நுட்ப முறையில் முன்னெடுப்பதற்கான உதவிகளை மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் குழுவொன்று வழங்கவுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் முன்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம், மைக்ரோசொவ்ட் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய தலைவர் புனித் சந்தோக், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கும் ஆதரவிற்கும் வழிகாட்டலுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலிருந்து முழுமையாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், இலங்கை மக்களுக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்றும் அதனால்,அனைவரும் முழுமையான பயனடைய வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.
மேலும், இலங்கை மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்கு சுயாதீன குழுக்களின் ஆதரவை பெற்றுத்தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தர்மசிறி குமாரதுங்க மற்றும் மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு, கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, முஸ்லிம் பெண்கள் பாடசாலை, புஸ்ஸல்லாவ இந்து தேசிய பாடசாலை, தங்கல்ல பெண்கள் கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.