கரையோர சுத்திகரிப்பு வார சிரமதானம்.
கரையோர சுத்திகரிப்பு வார சிரமதானம் முல்லைத்தீவு கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கரையோர தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் இன்று(25) வெள்ளிக்கிழமை காலை 07.00மணிக்கு மல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் முல்லைத்தீவு நகரின் வண்ணாங்குளம் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கரையோர தூய்மைப்படுத்தலானது முல்லைத்தீவு நகரத்தின் வண்ணாங்குளம், கள்ளப்பாடு, புதுமாத்தளன் ஆகிய மூன்று கடற்கரையோரப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு வண்ணாங்குளம் கடற்கரையில் இடம்பெற்றது. இதன்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன், கண்ணாடிகள், ஏனையவை என மூன்று பகுதிகளாக தரம்பிரிக்கப்பட்டு பெருந்திரளான திண்மக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இச் சிரமதான நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு கடற்றொழில் சமாச உறுப்பினர்கள், கடற்றொழில் சார் சமூகத்தினர், பொலிசார், இராணுவத்தினர், கடற்படையினர், பாடசாலை மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.
இம் மாதம் 19ம் திகதி தொடக்கம் 25ம் திகதிவரை தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் கரையோர தூய்மைப்படுத்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.