சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்த சஜித் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்பு பல விடயங்கள் தொடர்பில் கலந்தாய்வு.
பொறுப்புள்ள கட்சி என்ற ரீதியில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் ஆழத்தையும் சிக்கலையும் ஐக்கிய மக்கள் சக்தி நன்கு புரிந்துகொண்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை நேற்று (20) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கவும், முதலீடுகளை வலுப்படுத்தவும், மக்களின் பொருளாதாரப் பலத்தை வலுப்படுத்தவும் வழிவகுக்க வேண்டும் என்று இக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக, நாட்டின் பாதிப் பேர் ஏழ்மையடைந்துள்ளனர். இந்நிலைமையால் குடும்பங் அலகுகளின் வருமானம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், சிறுவர்கள், 41 இலட்சம் பாடசாலை மாணவர்கள், இளைஞர்களிடையேயும் என ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இங்கு சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள வறுமை ஒழிப்பு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இதற்குப் போதுமானதாக இல்லை. ஜனசவிய வேலைத்திட்டத்தின் மாதிரியான புதிய சமூக பாதுகாப்புத் வேலைத்திட்டமொன்று தேவைப்படுகின்றது. நுகர்வு, முதலீடு மற்றும் சேமிப்பு போன்ற பகுதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்புடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற தங்கள் முன்மொழிவுக்கு, முன்னதாகவே அரசு பதிலளித்திருந்தால் தற்போதைய நிலைமை உருவாகியிருக்காது என்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள பாதை வரைபடம் மற்றும் இலக்குகளை ஐக்கிய மக்கள் சக்தி சாதகமாக ஏற்றுக்கொண்டாலும் சில முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
பொது நிதி நிர்வாகம், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவித்து, கடனை நிலையான முறையில் செலுத்துவதற்கான இயலுமையை ஏற்படுத்தும் விதமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த வரி வருவாயை ஈட்டும் முன்மொழிவான, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமான பெறுமானத்துடன் உடன்படலாம் என்றாலும், இந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் முறையை மாற்ற வேண்டும் என்றும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
இது மக்களை ஒடுக்காத வகையிலும், சமூக நீதியை உருவாக்கக் கூடிய வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
வரி அறவீடு, கலால் வரி அறவீடு மற்றும் சுங்க வரி அறவீடு ஆகியவற்றை மிகவும் வினைத்திறனாக மேற்கொள்ள அனைத்து துறைகளையும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அறவிட நடவடிக்கை எடுப்பது குறித்தும், இதற்கான ஏற்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அரசியல் ஆதரவு பெறும் வர்த்தகர்கள் மற்றும் கறுப்புச் சந்தை வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுபவர்களின் இழந்த வருமானத்தைப் பெறுவதற்கான கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
பொதுச் செலவின முகாமைத்துவத்தில் நிறுவனங்களின் செயல்திறன் அடிப்படையிலான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயமும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
சுருங்கிய பொருளாதாரம் அடுத்த பத்து ஆண்டுகளில், ஆண்டுக்கு 10 சதவீத என்ற நிலையான வளர்ச்சி விகிதத்தை அடைய திட்டமிடப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டதோடு, இதற்கான உபாங்களை வகுப்பதில் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்துவதே ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்பார்பாகும். இது உலகப் பொருளாதாரச் சந்தையில் நுழையும் போட்டிக் கட்டமைப்பாக இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முதலீட்டு மற்றும் சர்வதேச வர்த்தகக் கொள்கைகளை திருத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சர்வதேச கடன் மறுசீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதன் தாமதத்தால் முதலீடுகளின் மீது ஏற்படும் தாக்கம் அளப்பெரியது. இதற்காக கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கப்பட்டு, சர்வதேச கடன் தரவரிசையில் நுழைவதன் முக்கியத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி புரிந்துகொண்டுள்ளது என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
குடியரசு என்ற வகையில் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. கடனை மறுசீரமைப்பதில் நாடு கூடிய நன்மையையும் தள்ளுபடியையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற விடயம் தொடர்பாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
இதற்கிடையில், ஏதேனும் கடன் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், அது எந்தத் தயக்கமுமின்றி விசாரிக்கப்பட்டு, அதற்குக் காரணமான தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விடயமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
சில அரச முயற்சியாண்மைகளில் நிறுவனங்களில் ஊழல், வீண்விரயம் மற்றும் மோசமான முகாமைத்துவம் ஆகியவை பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான நிறுவனங்களை மறுசீரமைப்பதில் நாட்டுக்கு ஏற்ற உபாயங்களில் செயற்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், இலங்கையில் தாய்மார்கள், சிசுக்கள் மற்றும் குழந்தைகளின் போசாக்கு குறைபாடு கடந்த காலங்களில் உயர் மட்டத்தை எட்டியுள்ளது என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இதற்குச் சாதகமான தலையீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அவ்வாறே, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில், நாட்டின் தேசிய வருமானத்தில் 50 சதவீத பங்களிப்பையும், 52 சதவீத வேலைவாய்ப்பையும் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினரின் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
தற்போது கடும் நெருக்கடியில் உள்ள விவசாயிகள், மீனவர்கள், சுயதொழில் புரிவோர், அரச ஊழியர்கள் மற்றும் மத்திய தர மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இங்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.
நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், எந்தச் செல்வாக்குக்கும் ஆளாகாமல் பலதரப்பட்ட மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அஸ்வெசும திட்டத்தை மறுஆய்வு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர், சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழுவின் பிரதித் தலைவர் கத்யா ஸ்விரிட்சென்கா, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி சர்வத் ஜஹான் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் எரான் விக்கிரமரத்ன, கபீர் ஹாசிம், கலாநிதி ஹர்ஷ டி சில்வா, நிரோஷன் பெரேரா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா, சந்திம விரக்கொடி, எம்.வேலுகுமார், ஹர்ஷன சுபுன் ராஜகருணா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுஜீவ சேனசிங்கவும் இந்தச் சந்திப்பில கலந்துகொண்டனர்.
மேலும், நுண், சிறய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், தொழில்முனைவோரை பிரதிநிதித்துவப்படுத்தி, டானியா அபேசுந்தர, மகேந்திர பெரேரா, சுசந்த லியனாராச்சி, சுரேஷ் ராகவன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.