அமைச்சர் டக்ளஸின் வாக்குறுதியையடுத்து கைவிடப்பட்டது உணவு தவிர்ப்புப் போராட்டம்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரி நான்கு நாட்கள் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப் போராட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியால் கைவிடப்பட்டது.
கடந்த செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணை தூதரகத்திற்கு அருகாமையில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு போர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இன்று நான்காம் நாள் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
“இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசினேன்.
பாண்டிச்சேரி முதலமைச்சர் எல்லை தாண்டும் மீனவர்களைத் தடுப்பது தொடர்பில் எழுத்து மூலமான உறுதிமொழி தந்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் கடிதம் அனுப்பத் தயாராக இருப்பதாகவும், தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையகத்துடன் ஆலோசித்து கடிதம் அனுப்புவதாகவும் கூறியிருக்கின்றார்.
மீனவர் பிரச்சனை தொடர்பில் பேச வருமாறு இந்தியத் தரப்பினர் அழைப்பு கொடுத்திருந்தார்கள். நான் அவர்களிடம் கூறியிருக்கின்றேன் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் வர மாட்டார்கள் என்ற எழுத்து மூலமாக உத்தரவாதம் தந்தால் மட்டுமே பேச்சுக்கு வருவேன் என்று கூறியுள்ளேன்.
எனது நிலைப்பாடு அன்று என்ன கூறினேனே அதுதான் எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவார்கள்.
கைது செய்யப்படுபவர்களை விடுவிக்க எனக்கு அழுத்தங்கள் வந்தாலும் எனது நிலைப்பாடு ஒன்றுதான்.
இதனால்தான் இந்தியா என்னை எதிரியாகப் பார்க்கின்றது. ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் மீனவர் பிரச்சினையில் மெளனமாக இருப்பதால் எதிரியாகப் பார்ப்பதில்லை .
ஆகவே, இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞைகளைக் காண்பித்துள்ள நிலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடுங்கள். மீனவர்கள் பக்கமே நான் நிற்பேன்.” – என்றார்.
உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக தும்பளை, கொட்டடி, சேந்தான் குளம், குருநகர், மாதகல், பலாலி, தையிட்டி, சக்கோட்டை, மயிலிட்டி, வளலாய், மயிலிட்டி மற்றும் சீத்திப்பந்தல் ஆகிய கடற்றொழில் சங்கங்களைச் சேர்ந்த மீனவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று வருகை தந்திருந்தனர்.