சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக வாழ்வேன் – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லியில் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பிய நிலையில், இந்த சம்மன் சட்டவிரோதமானது எனக் கூறி கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் இரவு முதலமைச்சர் கெஜ்ரிவாலை அதிரடியாக கைதுசெய்தனர். அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்திய நிலையில், நேற்று மாலை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுபான வியாபாரிகளிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், ஹவாலா பரிவர்த்தனை மூலம் ஆம் ஆத்மி கட்சி பெற்ற 45 கோடி ரூபாய் லஞ்சப் பணம் கோவா தேர்தல் செலவுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் வாதிட்டார்.
இந்த ஊழலில் முதலமைச்சர் கெஜ்ரிவால் முக்கிய குற்றவாளி என்றும், மதுபான கொள்கையை உருவாக்கியதில் கெஜ்ரிவாலுக்கு நேரடி பங்கு இருப்பதாகவும் முறையிடப்பட்டது. எனவே, அவரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆதாரம் எதுவும் இல்லை என்றும், சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் அவரது தரப்பில் வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.
இருதரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில், வரும் 28-ஆம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா அனுமதி அளித்தார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையை தொடங்கினர். முன்னதாக நீதிமன்றத்துக்கு வந்த கெஜ்ரிவால் தான் சிறையில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் நாட்டுக்காக வாழ்வேன் என கூறினார்.
இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராடியதாக கூறி, ஆம் ஆத்மி கட்சியினரை காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்தனர். இதேபோன்று அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து நாடு முழுவதும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய தயாநிதி மாறன் எம்.பி, மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என பாஜக அரசு நினைப்பதாக சாடினார்.
இதனிடையே, தேர்தல் நேரத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தேர்தல் ஆணையத்தில் இந்தியா கூட்டணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வையுங்கள்! – ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சிறீதரன் வேண்டுகோள்