வடக்கு தமிழ் மக்களின் வாக்குகள் சஜித்துக்கே! – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை.

வடக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் இனவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்கமாட்டார்கள். எனவே, இனவாதிகள் இல்லாத கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கே ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் ஆதரவு வழங்குவார்கள்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ 75 இலட்சம் வாக்குகளைப் பெறுவார் எனத் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அலை இருக்கின்றது எனக் கூறப்பட்டாலும் தற்போதுள்ள வாக்கு வங்கியைவிட சற்று கூடுதல் வாக்கு அக்கட்சிக்குக் கிடைக்கும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்கு வங்கி 10 விகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
வடக்கிலும் எமக்கே ஆதரவு உள்ளது. இனவாதக் கட்சிகளுக்கு அம்மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். எமது அணியில் இனவாதிகள் இல்லை. சஜித் இனவாதம் அற்ற தலைவர். அனைத்து இனத்தவர்களும் அங்கம் வகிக்கக் கூடிய கட்சி எமது கட்சியாகும்.
அதேவேளை, அடுத்து என்ன தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட்டணியாக எதிர்கொள்வதற்குச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.” – என்றார்.