“ஈஸ்டர் குண்டுதாரிகளை நான் அறிவேன்” – மைத்திரிபால சிறிசேன. (Video)
ஈஸ்டர் தாக்குதலுக்கு உண்மையில் காரணமானவர்களை தமக்கு தெரியும் எனவும், நீதிமன்றத்தால் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டால் அல்லது உத்தரவு வழங்கினால் அது தொடர்பில் விளக்கமளிக்கத் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (22) தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை இரகசியமாக வைத்திருப்பது அந்த நீதிபதிகளின் பொறுப்பாகும் எனவும் முன்னாள் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘ஈஸ்டர் தின’ பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, தனது ஆட்சியின் போது கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் தற்போது வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், ‘ஈஸ்டர் தின’ பயங்கரவாத தாக்குதலை உண்மையில் செய்தது யார் என்பதை யாரும் அறிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு நாட்டை நல்ல நிலைக்கு இட்டுச் செல்லத் தயாராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் ஆதரவின்மையால் , தாம் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசும் , நாடும் நெருக்கடியில் உள்ளதால், நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் பொதுத் தேர்தலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலோ குறித்த நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பாராளுமன்றம் மக்கள் அதிகாரம் இல்லாத மிக மோசமான இடமாக மாறியுள்ளதாகவும், திருடர்கள், ஊழல்வாதிகள், மோசடி செய்பவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பாமல் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.