சபாநாயகர் யாப்பா நடத்துவது மிக மோசமான குடும்ப ஆட்சி! – அநுரகுமார போட்டுத் தாக்கு.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மிக மோசமான வகையில் குடும்ப ஆட்சியை முன்னெடுத்து வருகின்றார் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தீவிரமான முறையில் குடும்ப ஆட்சியை மேற்கொண்டு வருகின்றார்.
சபாநாயகரின் சகோதரன் வசந்த யாப்பா அபேவர்த்தன சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளராகச் செயற்படுகின்றார்.
இன்னொரு சகோதரனான சரத் யாப்பா அபேவர்த்தன சபாநாயகரின் இணைப்புச் செயலாளராகச் செயற்படுகின்றார்.
சபாநாயகரின் மைத்துனர் பிரேமானந்த குமசாரு இன்னொரு இணைப்புச் செயலாளராக உள்ளார்.
சபாநாயகரின் இன்னொரு சகோதரன் இந்துனில் யாப்பா அபேவர்த்தன ஊடகச் செயலாளராக உள்ளார்.
சபாநாயகரின் மகன் சமீர யாப்பா அபேவர்த்தன பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தராக உள்ளார்.
இந்த நியமனங்களை விட, சபாநாயகரின் இன்னொரு மகன் தேசிய லொத்தர் சபையின் தலைவராக நிதி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்போது அவரது குடும்பத்தினரும் சபாநாயகருடன் பயணிக்கின்றனர்.
தனது பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் சபாநாயகர் செயற்படுகின்றார். இப்படிப்பட்டவர்களை அடுத்த தேர்தலில் மக்கள் நிராகரிக்க வேண்டும்.” – என்றார்.