தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் இழுத்து திருச்செல்வம் சாதனை!

யாழ்ப்பாணம், தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் தனது தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
நேற்று (24) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் கொழும்பு – காலிமுகத்திடலில் இந்தச் சாதனை நிகழ்வு நடைபெற்றது.
1000 மீற்றர் தூரத்துக்கு வாகனத்தைத் தனது தாடியாலும் தலைமுடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே திருச்செல்வத்தின் நோக்கமாக அமைந்தது.
அதற்கமைய 1550 கிலோ கிராம் எடையுடைய ஏஷ் பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரத்துக்குத் தாடியாலும், 500 மீற்றர் தூரம் வரை தலைமுடியாலும் இழுத்து திருச்செல்வம் சாதனை படைத்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உலக சாதனை புத்தக நிறுவனப் பிரதிநிதிகள் இந்தச் சாதனை நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது வாகனத்தை இழுத்து வந்த செல்லையா திருச்செல்வத்தை ஆரம்பம் முதல் சாதனையை நிலைநாட்டும் வரையில் அமைச்சர் உற்சாகப்படுத்தி வந்தார்.
இந்த நிகழ்வை Cholan Book of World Record (CBWR) நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக அவதானித்து திருச்செல்வத்தின் சாதனையை அங்கீகரித்து, பதக்கத்தையும் விருதையும் பட்டயத்தையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களால் வழங்கிவைத்தனர்.