ஈரோடு எம்.பி கணேச மூர்த்தி மரணம்
மதிமுக நிர்வாகிகளில் முக்கியமான ஒருவரான கணேசமூர்த்தி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 76. ஈரோடு மக்களவைத் தொகுதி எம்பியான கணேச மூர்த்தி கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் மதிமுகவுக்கு திருச்சி மக்களவைத் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் வரும் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததால் ஈரோடு எம்பி கணேச மூர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து அவர் தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து கணேசமூர்த்தி கோவையில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கோவையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணேசமூர்த்தி பிழைக்க 50 விழுக்காடு வாய்ப்பு மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். மருத்துவமனையில் கணேசமூர்த்தி அனுமதிக்கப்பட்டிருந்த போது , அவரை காண மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு வந்தனர். 3 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 5.05 மணிக்கு கணேசமூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் உயிர் பிரிந்தது.
இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு ஈரோடுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. மதிமுகவில் மிகமுக்கியமான தலைவர்களில் ஒருவரான கணேசமூர்த்தி மருத்துவமனையில் உயிரிழந்தது அந்த கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலதிக செய்திகள்
நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபச் சாவு!
யாழிலும் கோர விபத்து! விவசாயி ஒருவர் சாவு!!
நீர்கொழும்பு மசாஜ் நிலைய ஊழியர்களில் HIV தொற்று கண்டறியப்பட்ட இருவரில் , 15 வயது சிறுமியும் ஒருவர்!
அரவிந்த் கெஜ்ரிவாலை ED காவலில் இருந்து விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு