ஒன்பது தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக இடையே நேரடிப்போட்டி
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, பாஜக, அதிமுக இடையே ஒன்பது தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகிறது.
இத்தொகுதிகளில் மூன்று கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
வடசென்னை, தென்சென்னை, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர் ஆகிய ஒன்பது தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
வரும் நாள்களில் முத்தரப்பினரும் கடும் வெயிலில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஒன்பது தொகுதிகளில் கலாநிதி, தமிழிசை சௌந்தரராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்ட பிரபலங்கள் களமிறங்க உள்ளனர்.
நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெறுவதன் மூலம் தமிழகத்தில் பாஜக பலமாகக் காலூன்றும் என்று நம்பிக்கை உள்ளதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. எனினும், சென்னை மாநகரம் திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம் என்று திமுக தரப்பும் வரிந்துகட்டி செயல்படுகிறது.