“முஸ்லிம் எழுதிய `பாரத் மாதாகீ ஜெய்’ கோஷம்” – இனி யாருக்குச் சொந்தம்? – பினராயி விஜயன்.
சங்பரிவார் அமைப்புகளின் மூல மந்திரமான `பாரத் மாதா கீ ஜெய்’ கோஷத்தை உருவாக்கியது இஸ்லாமியர் எனக் கூறி நாடாளுமன்றத் தேர்தல் களத்தை அதகளப்படுத்தியுள்ளார், கேரள முதல்வர் பினராயி விஜயன்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி, `வெகுஜன ராலி’ என்ற பெயரில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசிவருகிறார். அந்த வரிசையில், கடந்த 25-ம் தேதி, மலப்புரத்தில் பேசுகையில், “முஸ்லிம்கள், நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டியவர்கள் என்ற கண்ணோட்டம் சங்பரிவாருக்கு உள்ளது. அதற்காக, பல நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துவருகிறார்கள். எல்லா ஜாதியிலும், எல்லா இனத்திலும், எல்லா மதத்திலும் உள்ள இந்தியர்கள், ஒரே எண்ணத்துடன்தான் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள்.
நாட்டின் சரித்திரத்தில் தாஜ்மஹால், ஜும் ஆ மஜித் போன்றவற்றை உருவாக்கியது முஸ்லிம் மன்னர்கள்தான். இந்தியாவின் சொத்துகளாக இவற்றைப் பார்க்கிறோம். ஷாஜகானின் மூத்த மகன் தாரா சிக்கொஹ், சம்ஸ்கிருதம் படித்து 50 உபநிஷத்துக்களை பெர்ஷியன் மொழியில் மொழிபெயர்த்தார். அதனால்தான் உபநிஷத்துக்களின் சாரம்சத்தை உலகம் அறிந்தது.
இப்போது சில தலைவர்கள் அவர்களின் முன்பு இருப்பவர்களிடம் `பாரத் மாதாகீ ஜெய்’ என கோஷமிடச் சொல்கிறார்கள். இந்த கோஷத்தை உருவாக்கியது, ஏதாவது சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களா, அவருடைய பெயராவது சங்பரிவார் அமைப்பினருக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. அசீம்முல்லா கான் என்ற இஸ்லாமியர்தான், `பாரத் மாதாகீ ஜே’ என்ற கோஷத்தை எழுதினார். 19-ம் நூற்றாண்டில் நானா சாகிப்பின் பிரதான மந்திரியாக இருந்தவர் இந்த அசீம்முல்லா கான். முஸ்லிம் உருவாக்கியதாக அறிந்ததால், அந்த கோஷத்தை இனி சொல்லமாட்டோம் என முடிவு செய்வார்களா?
`ஜெய்ஹிந்த்’ என்ற கோஷத்தை உருவாக்கியவர், அபித் ஹாசன் என்ற இஸ்லாமியர். `முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் போகவேண்டும்’ எனக்கூறும்ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், இதை நினைத்துப் பார்க்கவேண்டும். நம் தேசம் அங்கீகரித்த தேசபக்திப் பாடலான, `சாரே ஜஹான் சே அச்சா…’ என்ற பாடலை எழுதியது முஹம்மது இக்பால். நம் நாட்டின் சுதந்திரத்துக்காக அனைவருடனும் முஸ்லிம்களும் போராடினர். ஆனால், ஹிட்லருடைய பாணியை மத்திய அரசு கையில் எடுக்கிறது” என்றவர், குடியுரிமை சட்டத்திருத்தத்தால் ஏற்படும் பாதகங்கள் குறித்துப் பேசியதுடன், காங்கிரஸ் கட்சியையும் சீண்டினார்.
“நம் நாட்டில் சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை வகித்த கட்சியைச் சேர்ந்த கேரள நிர்வாகிகளின் செயல்பாடுகள் இப்போது எப்படி இருக்கிறது? மத்திய அரசு நிறைவேற்றியதால், குடியுரிமைச் சட்டத்தை கேரளாவில் செயல்படுத்தாமல் இருக்க முடியாது என்று காங்கிரஸ் நிர்வாகிகள் சொல்லுகிறார்கள். 2019 டிசம்பர் மாதம் குடியுரிமை சட்டம் கொண்டுவந்ததும் கேரளாவில் போராட்டங்கள் கடுமையானது. அப்போது, காங்கிரஸ் எம்.பி-க்கள், காங்கிரஸ் தலைவரின் வீட்டில் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில், ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்தார். இடதுசாரி எம்.பி-யான ஆரிஃப் மட்டுமே எதிர்த்துக் குரல் கொடுத்தார். `பாரத் ஜோடோ’ யாத்திரையில் ஒருமுறையாவது குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தி ஒருவார்த்தை பேசினாரா?” என்று விளாசினார்.
இதையடுத்து, `தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக பினராயி விஜயன் பேசுவது தவறு ‘ என்று தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளது பா.ஜ.க.
இதுகுறித்து பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் பி.கே.கிருஷ்ணதாஸ் கூறுகையில், “முதல்வரின் பேச்சு அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானதும், தேசத் துரோகமானதும் ஆகும். இதைத்தான் முன்பு முகம்மது அலி ஜின்னா பேசினார். பினராயி விஜயனுக்கு எதிராக ராஜதுரோக வழக்குப் பதிய வேண்டும். முதல்வர் சீட்டில் அமர பினராயி விஜயனுக்கு சட்டபூர்வமான உரிமை இல்லை.
மதத்தைப் பார்த்து விஷயங்களைத் தீர்மானிப்பதில்லை. `பாரத் மாதாகீ ஜே’ எனக் கோஷமிடுவது எங்களுக்குப் பெருமையாக உள்ளது. அதை யார் எழுதினார் என்பதை அறிந்துகொண்டதால், இனி கம்யூனிஸ்டுகள் `பாரத் மாதாகீ ஜே’ என கோஷமிடுவார்களா?” என்றார்.
பினராயி விஜயன் அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியையும் சீண்டியதால், காங்கிரஸாரும் கொந்தளிக்கின்றனர். இதுபற்றி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வி.டி.சதீசன் (காங்கிரஸ்) கூறுகையில், “குடியுரிமைச் சட்டத்திருத்த விவகாரத்தை இந்தத் தேர்தலில் வாக்குக்காகத் தவறாகப் பயன்படுத்துகிறார் பினராயி விஜயன். அவருடைய சான்றிதழ் எங்களுக்குத் தேவையில்லை. முதல்வர் பொறுப்பில் இருந்துகொண்டு பச்சைப்பொய்யைக் கூறி வருகிறார்.
ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்குச் சென்று குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்த ஆதாரங்களை நான் வெளியிட்டுள்ளேன். கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சுகளையும் முதல்வருக்கு அனுப்பியுள்ளேன். முஸ்லிம் வாக்குகள் கிடைப்பதற்கு வேண்டி மட்டுமே பினராயி விஜயன் இப்படிப் பேசிவருகிறார்.
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அவருடைய கட்சி நடத்தியதைவிட, நாங்கள் அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தினோம், போராடினோம். 2019-ம் ஆண்டு, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது 835 வழக்குகளைப் பதிவு செய்துவிட்டு, 69 வழக்குகளை மட்டுமே வாபஸ் பெற்ற முதல்வர், பா.ஜ.க-வை சந்தோஷப்படுத்தியுள்ளார், நாங்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை, ஓட்டுக்கான ஆயுதமாகப் பயன்படுத்த விரும்பவில்லை” என்றார்.
அரசியல்வதிகளின் கை ஆயுதங்கள்… மக்களின் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் கூறுபோடாமல் இருக்கவேண்டும் என்பதுதான் எப்போதுமே முக்கியம்!