கச்சத்தீவு பிரச்சனையை `காங்கிரஸும் திமுக-வும் எந்தப் பொறுப்பும் இல்லை என்பதுபோல் அணுகியுள்ளன!’ – ஜெய்சங்கர்
“கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.” என பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் தமிழ்நாட்டின் அரசியலில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி பலமுறை தமிழ்நாடு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டது முதலே அது கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திடீரென தமிழ்நாட்டின் நீண்டகால மீனவர்களின் பிரச்னையாக இருக்கும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பான விவாதத்தை பா.ஜ.க கையில் எடுத்திருக்கிறது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை நேற்று வெளியிட்டார்.
அதில்,`1974-ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அரசு சுமார் 1.6 கிமீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட தீவை இந்திய-இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைப் பகுதியாக ஏற்றுக்கொண்டது. அப்போது தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியிலிருந்தது” எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில்,`பகட்டுப் பேச்சு மட்டுமே வைத்திருக்கும் தி.மு.க தமிழகத்தின் நலனைக் காக்க எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு தொடர்பாக வெளிவரும் புதிய விவரங்கள் தி.மு.க-வின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக வெளிக்காட்டிவிட்டது.
காங்கிரஸும் தி.மு.க-வும் குடும்ப கட்சிகள். அவர்கள் தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்கள் உயர வேண்டும் என்று மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்கள் மக்களைப் பொருட்படுத்துவதில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது” எனப் பதிவிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து இந்தியாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர்,“நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இலங்கைக்குத் கச்சத்தீவை வழங்க விரும்பினார். கச்சத்தீவு தொடர்பான பல தசாப்தங்களாக நிலவி வரும் எல்லை மற்றும் மீன்பிடி தொடர்பான உரிமைகள் பிரச்னை, திடீரென உருவாகவில்லை. அது நாடாளுமன்றத்தில் அடிக்கடி விவாதிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கும் தமிழகத்துக்கும் இடையே அடிக்கடி கடிதப் பரிமாற்றம் நடந்து வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்த பிரச்னை குறித்து பலமுறை கடிதம் எழுதியிருக்கிறார்.
தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும், இதே பிரச்னை குறித்துக் கேட்டிருக்கிறார். இதுவரை தமிழக முதல்வர்களுக்கு 21 முறை இது தொடர்பாகப் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் அணுகியுள்ளன. இன்றைய மத்திய அரசு இந்த சிக்கலைத் தீர்க்க வேண்டிய சூழலிலிருந்தாலும், இது இப்போதுதான் நடந்தது என்பது போல இரு கட்சிகளும் செயல்படுகின்றன” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலதிக செய்திகள்
கார்த்திகைப் பூ என நாங்கள் அறிந்திருக்கவில்லை : மாணவர்கள்.
கார்த்திகைப் பூ என நாங்கள் அறிந்திருக்கவில்லை : மாணவர்கள்.
ஏப்ரல் முட்டாள்கள் தினத்திற்கான வேர்கள் எங்கிருந்து தொடங்கியது?
“முஸ்லிம் எழுதிய `பாரத் மாதாகீ ஜெய்’ கோஷம்” – இனி யாருக்குச் சொந்தம்? – பினராயி விஜயன்.