யாழில் குழு மோதல்! 22 பேர் காயம்!! – வைத்தியசாலையிலும் பதற்றம்
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறைக் கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 22 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரையிலான 5 மணி நேரத்தில் மேற்படி 22 பேரும் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் திடீரென அதிகளவானோர் சிகிச்சைக்காக வந்தமையால் வைத்தியர்களும் சிறிது நேரம் நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.
இதேவேளை, சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டவர்கள், அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் ஆகியோர் வைத்தியசாலைக்குள்ளும் மோதலில் ஈடுபட முயன்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சிலரைக் கைது செய்தனர்.