புலம் பெயர் தமிழர்களின் திருமண மண்டப ஆசை ?- சிக்மலிங்கம் றெஜினோல்ட்
யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலுமாக இரண்டு திருமண மண்டபங்களைக் கட்டப்போவதாக ஆறு மாதங்களுக்கு முன்பு சொன்ன நண்பர், அந்தத் திட்டத்தை மாற்றி விட்டதாகத் திடீரென்று கூறினார்.
“கொரோனாவினால்தான் இந்த மாற்றமா?” என்று கேட்டேன். “இல்லை” என்றார்.
“அப்படியென்றால்….? இனிமேல் திருமணங்களே நடக்காதா? இனிமேல் வேறு கொண்டாட்டங்களுக்கு இடமில்லையா?” என்று கேட்டேன்.
“அப்படியல்ல. நிலைமை வேறுமாதிரியிருக்கு. தொலைக்காட்சி வந்ததோட தியேட்டர்களின் காலம் முடிஞ்சதைப்போல, திருமண மண்டபங்களின் காலமும் முடிஞ்சு கொண்டு வாறமாதிரித் தெரியுது. இப்ப மண்டபங்களுக்குப் பதிலாக வெளியே மரங்களுக்குக் கீழேயும், திறந்த வெளிகளிலும்தான் நிகழ்ச்சிகளை நடத்திறதுக்குச் சனங்கள் விரும்புதுகள். அதுக்குத் தோதான மாதிரி டெக்ரேஷனையும் செய்யக் கூடியதாயிருக்கு. இந்த நிலைமையில பெரியளவு முதவலீட்டைக் கொண்டுபோய் மண்டபங்களுக்குள்ள முடக்கத்தான் வேறுமா? என்றொரு எண்ணம்….!” என்றார் அவர்.
இதைப்பற்றி அவரும் நானும் தொடர்ந்து பேசினோம்.
இந்த யுகத்தில் மாற்றங்கள் சடுதியாக நிகழ்கின்றன. இதற்குப் பல காரணங்கள். பிரமாண்டத்தை நோக்கிய ஈர்ப்பு, கவர்ச்சி, தினமும் புதிது புதிதாகவும் வித்தியாசம், வித்தியாசமாகவும் (அரசியலைத் தவிர) எதையாவது காண வேண்டும், செய்து பார்க்க வேண்டும் என்ற முனைப்பு. அதற்கான ஆவல். மேலும் ஓரளவுக்குக் கையில் புரளக் கூடியதாக உள்ள பணம் அல்லது செல்வச் செழிப்பு, தொழில்நுட்பமும் தொடர்பாடலும் எனப் பல காரணங்கள் இந்த விரைந்த மாற்றங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றன.
இதனால் “புதிசு, புதிசு” என்று சதா மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. நேற்றிருந்தது இன்றில்லை. இன்றிருப்பது நாளை இல்லை என்ற மாதிரிச் சடுதியான மாற்றங்கள். அதற்கேற்ற மாதிரி இலகுவாகவும் குறைந்த செலவிலும் எதையும் பெறக்கூடியதான ஏற்பாடுகள். இப்படி உண்டாகியிருக்கும் இந்த மாற்றங்களே நம்முடைய விருப்பங்களைத் தீர்மானிக்கின்றன. அந்த விருப்பங்கள் புதிய தெரிவுகளைக் கோருகின்றன. இதற்கேற்ப வடிவங்கள் மாறுகின்றன. வண்ணமயமாகின்றன. இதற்கமைய முறைமைகள் மாறுகின்றன. இந்த விரைவான மாற்றங்களினால், ரசனை வேறுபாட்டினால் சில முதலீடுகள் பெரிய முடக்கம் காணவும் நேரிடுகிறது. அதாவது இந்தக் கலாசார விடயங்களில் நம்பிப் பெரிய முதலீடுகளைச்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உண்மைதான்.
ஒரு காலம் “தியேட்டர்களின் யுகம்” என்று புகழ்பெற்றிருந்த படமாளிகைகள் எல்லாம் இன்று இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய் விட்டன. 1980 களுக்கு முன்பான காட்சிகளைத் தெரிந்தவர்கள் ஒரு கணம் நினைத்துப்பாருங்கள், யாழ்ப்பாண நகரத்தில் மட்டும் பதினொரு படமாளிகைகளிருந்தன. றியோ, றீகல், சாந்தி, ஹரன், மனோகரா, வெலிங்டன், வின்ஸர், ராணி, ஸ்ரீதர், லிடோ என. இதைவிட சங்கானை, இணுவில், காங்கேசன்துறை, சுன்னாகம், சாவகச்சேரி, பருத்தித்துறை, நெல்லியடி என்று ஒவ்வொரு இடங்களிலும் பல தியேட்டர்கள் இயங்கின. இதைவிட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா என ஒவ்வொரு நகரத்திலும் அந்தந்த நகரங்களுக்கான அடையாளங்களாக தியேட்டர்களும் இருந்தன. பிறகு இவற்றில் பலவும் பொருட்களுக்கான களஞ்சியங்களாகின. அல்லது வேறு தொழில்மையங்களாகி விட்டன. சில தியேட்டர்கள் கராஜ்களாக மாறியதையும் கண்டிருக்கிறேன்.
இதற்கு முக்கியமான காரணம் தொலைக்காட்சியே. தொலைக்காட்சி வந்ததோடு அநேகமான தியேட்டர்கள் மூடப்பட்டன. தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கின்ற அந்தக் கலாச்சாரமே காணாமல் போய்விட்டது. ஆனால், 1960, 70, 80 களில் தியேட்டர்கள் தமிழ்ச்சனங்களின் வாழ்க்கையோடும் பண்பாட்டோடும் ஒன்றாகக் கலந்திருந்தன. உதாரணமாக திருமணம் செய்து கொண்ட புதுமணத்தம்பதிகள் குடும்பத்தினரோடும் தாங்கள் தனியாகவும் தியேட்டருக்குச் செல்வது ஒரு சம்பிரதாயமாகவே அந்தக் காலத்திலிருந்தது.
இப்போது தியேட்டர்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சியும் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. என்னதான் விதவிதமான உத்திகள், உபாயங்களோடு நிகழ்ச்சிகளைத் தயாரித்து தொலைக்காட்சிச் சனல்களை இயக்கினாலும் பார்வையாளர் பரப்பு வரவரச் சுருங்கியே வருகிறது. மிஞ்சிப்போயிருக்கும் பார்வையாளர்கள் யாரென்றால் முதியோரும் குடும்பப் பெண்களுமே. அவர்களை இலக்கு வைத்தே தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கப்படுகின்றன. மற்றவர்கள் Youtupe க்கும் சமூக வலைத்தளங்களுக்கும் நகர்ந்து விட்டனர்.
நிரேஸூக்கு வயது 23. பல்கலைக்கழக மாணவர். கொரோனாவினால் விரிவுரைகள் இல்லை என்பதால் வீட்டில் நிற்கிறார். ஹோலில் அவருக்கு முன்னே தொலைக்காட்சி கவனிப்பாரின்றி இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரோ செல்போனை விரல்களால் உருட்டிக் கொண்டிருக்கிறார். இதுதான் எங்கும் நடக்கிறது. ஆகவே தொலைக்காட்சிகளின் கதையும் ஏறக்குறைய முடிவுக்கு வந்த மாதிரித்தான்.
இப்படித்தான் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாட்டங்கள், வைபவங்களுக்கெல்லாம் தகரப்பந்தல்கள் இடம்பிடித்தன. விதவிதமான பந்தல்கள். விதமான சோடனைகள், அலங்காரங்கள். போடப்படுகின்ற கதிரைகள் கூட பந்தலோடு வரும். அந்தத் தகரக்கதிரைகளை இன்னும் பலர் மறந்திருக்க மாட்டார்கள்.
2000 இல் இது சடுதியாக மாறியது. அந்த இடத்தைப் பிளாஸ்டிக் யுகம் கிசுகிசென வளர்ந்து மூடியது. தகரப்பந்தல்களும் தகரக்கதிரைகளும் காணாமல் போகும் நிலை உருவானது. பந்தல்கள்தான் மரணச் சடங்கு, சிறிய நிகழ்வுகள் என்ற அளவில் தப்பிப் பிழைத்தாலும் தகரக்கதிரைகள் காலாவதியாகி விட்டன.
இப்போது தகரப்பந்தல்களின் இடத்தையும் திருமண மண்டபங்கள் ஆக்கிரமித்து விட்டன. ஊருக்கு ஊர், விதவிதமான முறையில் வசதிப் பெருக்கங்களோடு அமைக்கப்பட்டிருக்கும் திருமண மண்டபங்கள். இதற்கேற்ற மாதிரிச் சடங்குகளின், வைபவங்களின் முறைமைகளும் திருமண மண்டபங்களுக்கு ஏற்ற மாதிரிப் பிரமாண்டத்தன்மையைப் பெற்றன.
2010 க்குப் பிறகு தமிழ்ப்பகுதிகளில் பெருமளவுக்கு முதலீடு செய்யப்பட்டது திருமண மண்டபங்களில்தான் என்று சொல்லுமளவுக்கு அவற்றின் எண்ணிக்கை உண்டு. இதில் கூடுதலான ஆர்வம் காட்டியவர்கள் புலம்பெயர் தமிழர்களே. ஆனால், இது தவறான ஒரு முதலீடாகும் என்று சமூகப் பொருளாதார அறிஞர்களில் சிலர் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். அந்த எச்சரிக்கை பலராலும் கவனித்திற் கொள்ளப்படவில்லை.
இன்று அது தவிர்க்க முடியாமல் பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகி விட்டது. மண்டபங்களுக்குப் பதிலாக மரங்கள், பூங்காக்கள், வெளியரங்குகளில் நிகழ்வுகளை நடத்தும் புதிய மோஸ்தர் உருவாகியதால் மண்டபங்களின் நிலை கேள்விக்குள்ளாகியிருக்கிறது. வண்ண வண்ண மின்விளக்குளின் விதவிதமான அலங்காரங்களுக்கு பொதுவெளி அரங்கு நெகிழ்ந்து கொடுக்கும் என்பதால் மண்டபங்களைத் தவிர்த்துப் பொதுவெளி அரங்கை நோக்குகின்றது மக்களின் விருப்ப உளவியல்.
இது தனியே இந்த மாதிரியான முதலீடுகளுக்கு மட்டும் நேர்ந்திருக்கும் நெருக்கடியோ சவாலோ மட்டும் நேர்ந்த ஒன்றல்ல. உணவுக்கடைகள், புடவையகங்கள், அழகுசாதன விற்பனையகங்கள் போன்றவற்றுக்கும் ஏற்பட்டிருக்கும் ஒரு நெருக்கடிதான். ஆனால், அவை எந்தச் சந்தர்ப்பத்திலும் தம்மை அதற்கேற்றமாதிரி மாற்றிக் கொள்ளலாம். அதற்கான வசதி அந்தத் தொழில்களில் உண்டு. பொருட்களை அல்லது உணவு வகைகளை மாற்றி விட்டால் போதும். கடைகளின் அமைப்பிலும் சிறிய அளவில் மாற்றங்களைச் செய்து சமாளித்துக் கொள்ளலாம்.
பெரிய முதலீடுகளில் உடனடியாக அப்படிச் செய்ய முடியாது. அது இழப்புத்தான்.
எனவேதான் இந்த மாதிரிக் கலாச்சார ரீதியான விடயங்களுக்கான முதலீடுகளுக்குப் பதிலாக உற்பத்திசார்ந்த முதலீடுகளைச் செய்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. உற்பத்தி சார்ந்த முதலீடுகள் எப்போதும் நட்டத்தை ஏற்படுத்துவது குறைவு. அவற்றின் தன்மைகள் மாறினாலும் அதற்கேற்றமாதிரி மாற்றங்களையும் செய்து கொள்ளலாம்.
எனவேதான் புதிய முதலீட்டாளர்கள் நம்முடைய சூழலுக்கும் வாழ்வுக்கும் ஏற்றமாதிரி உற்பத்தி சார்ந்த முதலீடுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அவற்றில் முதலிடவும் வேண்டும். அது அவர்களையும் அவர்களுடைய முலீடுகளையும் பாதுகாக்கும். சமூகத்தையும் வளர்க்கும்.
தமிழ்ச்சமூகம் அரசியலில் மட்டுமல்ல, உற்பத்திப் பொருளாதாரத்திலும் உற்பத்தி முறையிலும் இன்று பின்னடைந்தே உள்ளது. பலவீனப்பட்டே இருக்கிறது. இதை மாற்ற வேண்டிய கட்டாயமும் கடமையும் நமக்கு முன்னே உள்ளது. இது இன்றைய வரலாற்றுக் கடமை.
அப்படியென்றால் எந்த மாதிரியான முதலீடுகளைச் செய்யலாம்? என்ற கேள்வி எழும். சமூகப் பொருளாதார அறிஞர்கள் இதற்கான வழியைக் காட்டியிருக்கின்றனர். குறிப்பாக பாலுணவு உற்பத்தி, விவசாய உற்பத்திகளை Post Production முடிவுப் பொருட்களாக மாற்றுதல், இறைச்சி, மீன் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி, கைவினைப்பொருட்களின் உற்பத்தி, ஆடை உற்பத்தி, விவசாயப் பண்ணைகள், நகரத்துக்கு வெளியேயான சுற்றுலா விடுதிகள்… எனப் பலவுண்டு.
இவற்றில் நாம் தனி முத்திரை பதிக்க முடியும். நமக்கான பிரத்தியேகச் சந்தை வாய்ப்பாக புலம்பெயர் சமூகத்தினரும் உள்ளனர். ஆகவே இதில் நாம் மாற்றிச் சிந்தித்தால் வெற்றிகளைப் பெறக் கூடியதாக இருக்கும். நண்பர் சரியாகத்தான் நாடியைப் பிடித்திருக்கிறார். அவர் நிச்சயமாக வெற்றியைப் பெறவே போகிறார். நிலைமைகளைக் கவனித்து, யதார்த்தத்தை உணர்ந்த எவருடைய பயணமும் வெற்றியின் படிக்கட்டிலேயே நிகழும்.