தைவான் நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை.
தைவான் நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டில் உள்ள ஹுவாலியன் நகரில் இன்று (ஏப்.,03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.4 ரிக்டர் அளவில் பதிவானது. தைவான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த நிலநடுக்கம் பதிவானது. தைவானில் ஒரு மணி நேரத்தில் 11 முறை வெவ்வேறு ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக தெற்கு ஜப்பானிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவானுக்கு அருகிலுள்ள தீவுகளில் 3மீ வரையும் சுனாமி அலைகள் தாக்கலாம் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒகினாவா பகுதிகளில் உள்ள மக்களை குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.