தமிழ்நாடு அரசு நூலகங்களுக்கு வண்ணத்திரை, முரசொலி மட்டும் போதும்? ஆட்சியினரை திருப்திபடுத்த வேற வழி? : மாரிசெல்வி

படிப்பு மட்டும் தான் அடுத்த தலைமுறைக்கான விடியலாக இருக்க முடியும். அந்த விடியலை ஏழை மாணவர்களுக்கும் சாத்தியமாக்குவதற்காக பொது நூலகங்கள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமங்கள் வரை தன் கரம் நீட்டியிருக்கும் நூலகங்கள் வாயிலாக லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் படித்து, பொது அறிவை வளர்த்து, ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவர்கள், பொறியாளர்கள், அறிவியலாளர்கள் என சமூகத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

ஆனால் இன்று… தன்னை வளர்த்தெடுத்து மிகப் பெரிய பதவியில் அமர்த்திய நூலகத்தின் கரங்களை, தானே முறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர் தமிழகத்தின் உயரிய பதவிகளை அலங்கரிக்கும் அதிகாரிகள் சிலர்.

பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்ட வேண்டாமே… குறிப்பாக ஆதாரத்துடன் கூற முடியாமா என்று, ஏசி அறையில் ஆங்கில புத்தகங்கள் படித்துக்கொண்டே கேட்கும் மேதாவிகளின் கவனத்திற்கு:

தமிழகத்திலுள்ள 4000 பொது நூலகங்களிலும், மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் பல்வேறு பத்திரிகைகளை வாங்கி வைக்க வேண்டும் என்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு, மேலிடத்தை மட்டும் குளிர்வித்தால் போதும் என்ற நோக்கில் செயல்படுகிறார் இளம்பகவத் ஐஏஎஸ்.

கிராமப்புற மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காகவே தொழில்நுட்பம், அறிவியல், பொது அறிவு தொடர்பான பல பத்திரிகைகளை நூலகங்களுக்காக வாங்குவதை அடியோடு நிறுத்தி விட்டார்.

இதற்கு பதிலாக, ஆட்சியாளர்கள் நடத்தும் தினகரன், ஆட்சியாளர்களின் கட்சி பத்திரிகையான முரசொலி, மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் சினிமா கிசுகிசு பத்திரிகையான வண்ணத்திரை, குங்குமம் ஆகிய பத்திரிகைகளுக்கு மட்டும் தமிழகத்தின் அனைத்து நூலகங்களுக்கும் ஆர்டர் போடப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் புத்தகங்கள், பத்திரிகைகள் வாங்க வசதியில்லாமல் , தங்கள் கிராமப்புற நூலகங்களுக்கு சென்று பொது அறிவு பத்திரிகைகளை படிக்கும் மாணவர்களின் அறிவு பயணத்தை சுவர் எழுப்பி தடுத்து நிறுத்தி விட்டார் இளம்பகவத்.

இதில் வேதனை கலந்த வேடிக்கை என்னவென்றால், பொது நூலகத்தில் படித்து தான் ஐஏஎஸ் ஆனேன் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வதில் இவர் எப்போதும் தயக்கம் காட்டுவதில்லை. தன்னை ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்து செல்லும் இந்த போக்கு, பத்திரிகைகளை மட்டுமில்லாமல் கிராமப்புற மாணவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஏழை மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாக கூறிக்கொள்ளும் அதிகாரிகள், முதல் வேலையாக தமிழகத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் செயல்படும் நூலகங்களை வெறிச்சோடி கிடக்கச் செய்து விட்டனர். தற்போது பத்திரிகைகள் வாங்குவதையும் நிறுத்தி விட்டு, அந்த கட்டிடங்களை பாழடைந்த அறைகளாகவே மாற்றி விட்டனர்.

மாணவர்கள், இளைஞர் நலனுக்காக பத்திரிகைகள் நடத்தும் பதிப்பாளர்கள் பெரும்பாலும் பொது நூலகங்களில் பத்திரிகைகள் படித்து வளர்ந்தவர்களாக இருப்பர். அதனால் தான், ஏழை மாணவர்கள் எந்த தடையும் இல்லாமல் தாய்மொழியில் தொழில்நுட்பங்கள், அறிவியல், பொது அறிவை வளர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், பெரிய லாபத்தை எதிர்பாராமல் தொடர்ந்து கடினமான சூழல்களுக்கு இடையே பத்திரிகைகள் நடத்தி வருகின்றனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகும் ஊர்ப்புற நூலகங்கள்

ஏழை மாணவர்கள் எளிதாக அவர்களுக்கான பத்திரிகைகளை இலவசமாக அணுகும் இடம், நூலகம் தான். அதனால் தான் பொது நூலகங்களுக்கு தங்கள் பத்திரிகைகளை அனுப்பி வருகின்றனர். இது புரிந்தும், உண்மை நிலை தெரிந்தும் எதேச்சதிகாரத்துடன் செயல்படும் இளம்பகவத் போன்ற அதிகாரிகளை அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

இது குறித்து நியாயம் கேட்கச் செல்லும் பத்திரிகையாளர்கள், பதிப்பாளர்களை சந்திக்காமல் “நான் சொல்வது தான் சட்டம். என்னை மீறி எதுவும் செய்ய முடியாது” என்று அவமதித்து வருகிறார். அவமதித்ததோடு நில்லாமல், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களைத் தான் அதிகமாக கொள்முதல் செய்ய வேண்டும், அப்போது தான் மாணவர்கள் தன்னைப் போல ஐஏஎஸ் அதிகாரி ஆவார்கள் என்று மாணவர்கள் மீது அதீத அக்கறை உணர்வுடன் விளக்கமளிக்கிறார்.

தமிழகத்தில் எத்தனை லட்சம் மாணவர்கள் ஆண்டு தோறும் பள்ளி இறுதி தேர்வெழுதுகின்றனர்?

அத்தனை பேரும் போட்டி தேர்வுகள் எழுதுகின்றனரா?

எழுதும் அத்தனை பேரும் ஐஏஎஸ் ஆகி விடுகின்றனரா?

போட்டித் தேர்வுகள் தவிர மாணவர்கள் வேறு வாய்ப்புகளை நோக்கி செல்லக் கூடாதா?

தகவல் தொழில்நுட்பம், அறிவியல், அரசியல், மருத்துவத் துறை, கணக்கியல் உள்பட நூற்றுக்கணக்கான துறைகளில் மாணவர்கள் செல்ல ஆசைப்படக்கூடாதா?

அப்படி ஆசைப்படும் மாணவர்களுக்கு உதவும் பத்திரிகைகள் செயல்படக்கூடாதா?

அந்த பத்திரிகைகள் ஏழை மாணவர்களின் கைகளுக்கு நூலகங்கள் வாயிலாக செல்லக் கூடாதா?

இத்தனை கேள்விகளையும் இளம்பகவத் முன்,  மாணவர்களும்,  பொது மக்களும் வைக்கின்றனர்.

ஆனால், அவரும் ஒரு பதில் கேள்வியை அனைவர் முன் வைக்கிறார்,

“உங்கள் தேவைகளை நிறைவு செய்தால் மேலிடத்தை எப்படித்  திருப்திபடுத்துவது?

 


சென்னையிலிருந்து மாரிசெல்வி

Leave A Reply

Your email address will not be published.