பொன்னாவெளியில் டக்ளஸை விரட்டியடித்தனர் மக்கள்! வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது; அமைச்சரின் ஆதரவாளர்களும் ஓட்டம்.
கிளிநொச்சி, ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாவெளிப் பகுதியில் அமைக்கப்படவுள்ள டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையின் வளாகத்துக்கு நேற்று (05) மதியம் ஆதரவாளர்கள் படை சூழ வந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அந்த வளாகத்துக்குள் நுழைய விடாது கிராம மக்கள் விரட்டியடித்தனர்.
மக்களின் எதிர்ப்பையும் மீறி அமைச்சரும், 6 பஸ்களில் வந்த ஆதரவாளர்களும் சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்படவுள்ள வளாகம் மற்றும் சுண்ணக்கல் அகழ்விடத்துக்குள் நுழைய முற்பட்ட வேளையில் இரு தரப்பினருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பு மற்றும் தள்ளுமுள்ளும் இடம்பெற்றது.
இருப்பினும் அமைச்சரும், அமைச்சருடைய ஆதரவாளர்களும் நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பொன்னாவெளி மக்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் நின்ற ஜெயபுரம் மற்றும் முழங்காவில் பொலிஸார் அமைச்சருடைய ஆதரவாளர்களை அப்புறப்படுத்த முயற்சித்த போதிலும் அவர்கள் தொடர்ந்தும் மக்களுடைய தடையை உடைத்துக்கொண்டு சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்படவுள்ள வளாகத்துக்குள் நுழைய முற்பட்டமையால் பொலிஸாருக்கும், அமைச்சருடைய ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இறுதியில் சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் அமைச்சரும் அவருடைய ஆதரவாளர்களும் அவ்விடத்தில் இருந்து பின்வாங்கினர்.
பொன்னாவெளி கிராமத்தில் அமையவுள்ள சீமெந்துத் தொழிற்சாலை மற்றும் சுண்ணக்கல் அகழ்வு செயற்பாடுகளைக் கண்டித்து நான்கு கிராம மக்கள் இணைந்து 277ஆவது நாளாகப் போராடி வரும் நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் போராட்டத்தை மலினப்படுத்த முற்பட்ட வேளை மக்கள் கொதிப்படைந்ததுடன் அமைச்சரையும், அவரின் ஆதரவாளர்களையும் அங்கிருந்து ஓட ஓட விரட்டியடித்தனர்.