நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் அகிலனுக்கு அழைப்பாணை!
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் அந்த வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ள ‘புதிய சுதந்திரன்’ என்ற இலத்திரனியல் பத்திரிகையின் பிரசுரிப்பாளர் அகிலன் முத்துக்குமாரசுவாமி என்பவரை நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் எதிர்வரும் 24ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி அழைப்புக் கட்டளை பிறப்பிக்க திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டது.
வழக்கின் எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் செய்த முறைப்பாட்டின் பேரில் இந்த அழைப்பு கட்டளையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.
”நேற்றும், இன்றும் அந்தப் பத்திரிகையில் வெளியான செய்திகள் பற்றி நீதிமன்றுக்குச் சுட்டிக்காட்டினேன். ‘சுமந்திரனுக்கு இரண்டு தெரிவுகள்தான் உண்டு. அதில், அவர் மற்றவர்களுடன் இணங்கி இன்றைக்கே வழக்கை முடித்துக் கொண்டால் கட்சி நன்மை பெறும். இல்லாவிட்டால் – அப்படி அவர் செய்யாவிட்டால் – அது கட்சியை இழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அது சம்பந்தமான வேறு கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். நிலுவையில் வழக்கு ஒன்று இருக்கையில், அதிலே கட்சிக்காரர் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு நீதிமன்றமே அவகாசம் கொடுத்திருக்கின்றபோது, குறித்த நிலைப்பாட்டையே அவர் எடுக்க வேண்டும் என்று பொதுவெளியில் கூறி, அவருக்கு அழுத்தம் கொடுப்பது நீதி நிர்வாகத்தைப் பரிபாலிக்கின்ற செயற்பாட்டைப் பாதிக்கும் நடவடிக்கை என்று நீதிமன்றத்தில் முறையிட்டேன். அதன் அடிப்படையில் அவருக்கு அழைப்புக் கட்டளை அனுப்பப்படுகின்றது.” – என்று சுமந்திரன் பின்னர் தெரிவித்தார்.