ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் பதட்டம் : போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் ஆசன அமைப்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் கட்சியின் தலைமையகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து கட்சி தலைமை அலுவலகத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் இருந்த பல கோப்புகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான விசாரணைகளையடுத்து அதற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகள் முடியும் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் செல்வது தடைசெய்யப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இருந்து சில கோப்புகள் காணாமல் போயுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளர் நாயகம் துஷ்மந்த மித்ரபால நேற்று (05) மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இதன் காரணமாக இன்று (06) பிற்பகல் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் எவரையும் நுழைய விடாமல் தடுத்துள்ளதாக பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சம்பவத்துடன் தொடர்பில்லாத சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் கேட்போர் கூடத்துக்குள் எவரையும் நுழையவிடாமல் பொலிஸார் தடுத்ததாகவும் பதில் பொதுச் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.