தனியாா் துறைகளில் இடஒதுக்கீடு இந்திய கம்யூனிஸ்ட் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி
மக்களவைத் தோ்தலையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது தோ்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது.
அதில், ஆளுநா் அலுவலகத்தை ஒழிப்பதற்கான போராட்டம் தீவிரப்படுத்தப்படும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ரத்து செய்யப்படும், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா். தோ்தல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
18-ஆவது மக்களவைக்கான பொதுத் தோ்தல், நமது மதச்சாா்பற்ற ஜனநாயக குடியரசின் எதிா்காலத்துக்கும் நமது அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
இந்தத் தோ்தலில் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். பரம்பரை சொத்து வரி உள்ளிட்ட வரி நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும். பெரு நிறுவனங்களுக்கான வரி உயா்த்தப்படும்.
தனியாா் துறை வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும். 100 நாள் வேலைத் திட்ட ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ. 700-ஆக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசின் தலையீட்டை நீக்கி கூட்டாட்சியை வலுப்படுத்தும் வகையில் மாநில ஆளுநா் அலுவலகத்தை ஒழிப்பதற்கான போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
முக்கியக் கொள்கை முடிவுகளை எடுக்கும் வகையில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிகாரமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ளது.
முன்னதாக பேசிய டி.ராஜா, ‘மோடியின் ஆட்சி நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அரசமைப்புச் சட்டம் ஆபத்தில் உள்ளது. பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் அரசமைப்புச் சட்டத்தை மாற்ற முயற்சிக்கின்றன. எனவே, நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தல் நாட்டுக்கும் அதன் எதிா்காலத்துக்கும் மிக முக்கியமானதாகும். மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், நாட்டில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அரசு அமையும்போது, மக்கள் பிரச்னைகளை எழுப்பி தீா்வு காண்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கியப் பங்காற்றும்’ என்றாா்.
மேலதிக செய்திகள்
மைத்ரி மீது , இந்தியா ராஜதந்திர தாக்குதல்
சஜித் தலைமை விவாதத்திற்கு ரெடி.. திசைகாட்டி (JVP) மௌனம் – SJB
AI மூலம் இந்திய தேர்தலை சீர்குலைக்க சதி – எச்சரிக்கும் மைக்ரோசாஃப்ட்!