இளம் மனைவியை கொன்று, 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய 28 வயது இளைஞன்.
பிரிட்டனில் இளம் மனைவியை கொன்று, 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய 28 வயது இளைஞரையும், அவருக்கு உதவிய நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் செரிமோனியல் மாகாணம் லிங்கொன்ஷைர் பகுதியைச் சேர்ந்தவர் நிக்கோலஸ் மெட்சன், 28. இவருக்கு, ஹோலி பிரெம்லி, 26, என்ற பெண்ணுடன் 2021ல் திருமணம் நடந்தது.
இவர்களின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிதாகச் சென்றாலும், நாளாக நாளாக நிக்கோலசின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, குடும்ப வாழ்க்கை கசந்தது.
மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்ட நிக்கோலஸ், தன் மனைவி வளர்த்து வந்த செல்லப் பிராணிகளை துன்புறுத்த துவங்கினார்.
கடந்த ஆண்டு மார்ச்சில், ஹோலி ஆசை ஆசையாய் வளர்த்த வெள்ளை எலிகளில் சிலவற்றை மிக்சியில் அரைத்தும், மைக்ரோ ஓவனில் வேக வைத்தும் கொடூரமாக அவர் கொன்றார்.
செல்லப் பிராணியான நாய்க்குட்டியை துணி துவைக்கும் இயந்திரத்தில் வைத்து அரைத்து கொலை செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மனைவி, நிக்கோலசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடுத்தடுத்த நாட்களில் இது தொடர்பாக இருவருக்கும் இடையிலான சண்டை தொடர்ந்து நீடித்தது.
இந்நிலையில், தன் மகளை சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என ஹோலியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். நிக்கோலசால் தன் மகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ‘என் மனைவி என்னை தாக்கிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்’ என கூறி, உடலில் இருந்த காயங்களை நிக்கோலஸ் காட்டிஉள்ளார்.
இதற்கிடையே, அவர் வீட்டில் இருந்த சில கி.மீ., துாரத்தில் இருந்த வித்ஆம் ஆற்றில் இருந்து, சில உடல் பாகங்களை மீட்ட போலீசார், ஹோலி உடலில் இருந்து வெட்டி வீசப்பட்டதை உறுதி செய்தனர்.
நிக்கோலஸ் தான் மனைவியை கொன்றார் என நம்பிய போலீசார், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மனைவியை கொன்று, அவரின் உடலை 224 துண்டுகளாக வெட்டி, தன் நண்பன் ஜோஷ்வாவின் உதவியுடன் ஆற்றில் வீசியதை போலீசார் சமீபத்தில் கண்டுபிடித்தனர்.
இதற்காக, ஜோஷ்வாவுக்கு அவர் பணம் வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் மனைவியை கொடூரமாக கொன்றதை நிக்கோலஸ் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, அவரையும், நண்பர் ஜோஷ்வாவையும் போலீசார் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், நிக்கோலஸ் செல்லப் பிராணிகள் மீது வெறுப்பு உள்ளவராகவும், மனநல நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.