இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உள்ளோம். அதனால், நீங்கள் ஒதுங்கியிருப்பது நல்லது’ என, அமெரிக்காவுக்கு ஈரான் கடிதம்.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உள்ளோம். அதனால், நீங்கள் ஒதுங்கியிருப்பது நல்லது’ என, அமெரிக்காவுக்கு ஈரான் கடிதம் எழுதியுள்ளது. இதனால், மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் நடந்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ஈரானும் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சிரியாவின் டமாஸ்கசில் உள்ள பயங்கரவாதிகள் மீது, இஸ்ரேல் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் துாதரகமும் சேதமடைந்தது.
இதில், இரண்டு ராணுவ தளபதிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த சில மாதங்களாகவே சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் துாதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது, ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவுக்கு ஈரான் தற்போது கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
‘இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உள்ளோம். நீங்கள் ஒதுங்கியிருந்தால் நல்லது. ஒதுங்கிருக்கும் பட்சத்தில் உங்கள் நிலைகள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படாது’ என, கடிதத்தில் ஈரான் கூறியுள்ளதாக தெரிகிறது.
ஆனால், இந்த கடிதம் தொடர்பாக அமெரிக்கா எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இது குறித்து, ஈரான் அதிபரின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி ஜம்ஷிடி கூறுகையில், ”இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சதி வலை பின்னியுள்ளார். இந்த வலையில் சிக்க வேண்டாம் என அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளோம்.
”இஸ்ரேலுக்கு நாங்கள் கொடுக்கும் பதிலடியால், அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே இதை வலியுறுத்துகிறோம்,” என்றார்.
அதேநேரத்தில், சிரியாவில் ஈரான் துாதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் எப்போது மேற்கொள்ளும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
லெபனானில் உள்ள தன் ஆதரவு பெற்ற ஹொஸ்பெல்லா பயங்கரவாத அமைப்பு வாயிலாக ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நெருக்கடியை சமாளிக்க அமெரிக்கா போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலிலும், இஸ்ரேலும் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிரியாவில் ஈரான் துாதரகம் மீது தாக்குதல் நடத்தியதுமே, தன் ராணுவத்தினரை முழு வீச்சில் உஷார்படுத்தியுள்ளது.
ராணுவத்தினருக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அனைவரும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதனால், மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.