திருமலை வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை திறப்பு.

திருகோணமலை – மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வந்த புத்தர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை, சிவபுரி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில் வீரகத்தி பிள்ளையார் ஆலயத்துக்குச் சொந்தமான காணியில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வந்த புத்தர் சிலை கடந்த வெள்ளிக்கிழமை மாலை அவசர அவசரமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அந்தப் பகுதியில் வசிக்கும் சிறியளவிலான மக்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
அந்தப் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. இவ்விடத்திலேயே தற்போது பாரிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு புத்தர் சிலை நிறுவப்பட்டது.
இதுபோன்ற பௌத்தமயமாக்கலின் மூலம் தமிழர் பகுதிகளில் உள்ள தமிழர்களுடைய காணிகள் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டு சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றன என்றும், சிறிய புத்தர் சிலை வைப்பதில் தொடங்கி அது விகாரையாக மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் வரையிலான செயற்பாட்டை அரச அனுசரணையுடன் சிலர் செய்து வருகின்றனர் என்றும், இதற்கு அதனுடன் சம்பந்தப்பட்ட அரச நிர்வாகமும் துணைபோகின்றது என்றும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.