நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்
சாவகச்சேரி சிவன் கோயில் முன்னால் ஆரம்பம்
நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அறிவிக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரியில் அமைந்துள்ள சிவன் ஆலய வளாகத்தில் குறித்த உண்ணாவிரதம் ஆரம்பமாகியுள்ளது.
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வீதிகளில் இராணுவத்தினரும் அரச புலனாய்வாளர்களும் உலாவித் திரிகின்றனர்.