ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய அமைச்சர் ராஜினாமா
டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது அக்கட்சிக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா உட்பட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில், கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 57 வயதாகும் ராஜ்குமார் ஆனந்த், பட்டியலின, பழங்குடியின நலத்துறை, சமூக நலன், கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊழலை எதிர்த்துப் போராட தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி தற்போது ஊழலில் சிக்கித் தவிப்பதால், அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அரசியல் மாறினால் நாடு மாறும் என பேசிய கெஜ்ரிவால், இன்று அரசியல் மாறாத நிலையில், அவர் அரசியல்வாதியாக மாறிவிட்டதாக சாடினார்.கட்சியில் தலைமைப் பதவிகளை வழங்குவதில் ஆம் ஆத்மி பாரபட்சமான நடைமுறைகளை கடைப்பிடிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி.க்களில் பட்டியலினம் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றார். மேலும் தான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், பாஜகவின் அழுத்தம் காரணமாகவே அமைச்சர் பதவியில் இருந்து ஆனந்த் விலகி இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் கருத்து தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா செய்தது ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் நெருக்கடியை தருவதாக அமைந்துள்ளது.
மேலதிக செய்திகள்
புத்தாண்டு சுபவேளை பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு.
யாழில் காய்ச்சலால் மாணவி சாவு!
யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
மொட்டுவை விட்டு வெளியேறியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! – அரசியல் குழு தீர்மானம்.
தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம்: பின்னணியில் ராஜபக்சக்களா? – சுமந்திரன் எம்.பி. சந்தேகம்.
யாழ்ப்பாணத்தில் புற்றுநோயால் கடந்த வருடம் மட்டும் 71 பேர் சாவு.