இ.தொ.காவின் செந்திலும் ஜீவனும் கூட்டு நாடகம்! – வேலுகுமார் விளாசல்.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2024/04/m.velukumar.jpeg)
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச்செயலாளரும் கூட்டு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சூளுரைத்திருந்தது. ஆனால், இன்று 28 நாட்கள் கடந்துவிட்டன. எனினும், சம்பள உயர்வு தொடர்பில் முன்னேற்றகரமாக எதுவும் நடக்கவில்லை.
இதற்கு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் கூட்டு நாடகமே பிரதான காரணமாகும். ஆளுங்கட்சிப் பக்கம் நின்று பதவிகளை வகித்தாலும், அந்தப் பதவி நிலையைத் தொழிலாளர்களின் நன்மைக்காக அவர்கள் பயன்படுத்துவதில்லை. மாறாக அரசைத் திருப்திப்படுத்துவதே அவர்களின் நோக்கம்.
தங்களின் இந்தக் கூட்டு நாடகத்தை மூடிமறைக்கவே ஏனைய தொழிற்சங்கங்கள் மீது அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.” – என்றார்.