அண்டை நாடுகளுடனான கொள்கையில் முதலில் இலங்கைக்கே முன்னுரிமை.
இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடனான கொள்கையில் முதலில் இலங்கைக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் காணொளி மூலமான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
இதன்போது சமீபத்தில் பொதுத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு தனது வாழ்த்துக்களை நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேலும் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றி உங்கள் தலைமை மீதான நம்பிக்கையை காட்டுகிறது என்றும், இந்த வெற்றி இந்திய -இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க வாய்ப்பளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு எப்போதும் தனது அண்டை நாடுகளுடனான கொள்கையில் முதலில் இலங்கைக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்று காலத்தில் இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவிக்கு மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை மத்திய வங்கிக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றலை வழங்குவதற்கு தேவையான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட்டது.
மேலும் இந்த உரையாடலின்போது, கடந்த மாதம் 3ஆம் திகதி எம்.டி. நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தை கட்டுப்படுத்த விரைவான உதவியை வழங்கியமைக்காக இந்தியாவிற்கு மஹிந்த ராஜபக்ச பாராட்டும் தெரிவித்தார்