$12.5 பி. மோசடி வழக்கு: வியட்னாமியப் பெருஞ்செல்வந்தருக்கு மரண தண்டனை.
நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக வியட்னாமியப் பெருஞ்செல்வந்தரான டுரோங் மை லானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்தத் தகவலை வியட்னாமிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் வெளியிட்டது.
லான், 304 டிரில்லியன் டோங் (S$12.46 பில்லியன்) பணத்தைக் கையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சொத்து மேம்பாட்டு நிறுவனமான வேன் தின் ஃபாட் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைவியாக லான் பதவி வகித்தவர்.
நிதி கையாடல், ஊழல், வங்கி விதிமுறைகளை மீறியது ஆகிய குற்றங்களில் லான் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது.
லான் தொடர்பான வழக்கு விசாரணை மார்ச் மாதம் 5ஆம் தேதியன்று தொடங்கியது. எதிர்பார்க்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை எதிர்த்து லான் மேல்முறையீடு செய்வார் என்று அவரது குடும்ப உறுப்பினர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.