சிறுபான்மைச் சமூகங்களைப் பாதுகாக்க சிங்கப்பூர் அரசு கடப்பாடு கொண்டுள்ளது: சண்முகம்.
சிங்கப்பூரில் வசிக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்தையும் பாதுகாக்க அரசாங்கம் உறுதியான கடப்பாடு கொண்டுள்ளதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார். அவற்றில் முஸ்லிம், யூதச் சமூகங்களும் அடங்கும் என்றார் அவர்.
காஸாவில் நிலவிவரும் போரால் இஸ்ரேலின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் யூதச் சமூகங்கள் மீதான கண்ணோட்டத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் இலக்குடன், சிங்கப்பூரில் உள்ள யூதச் சமூகத்தை அத்தகைய தாக்கத்திலிருந்து பாதுகாக்க அரசாங்கம் செயல்படும் என்றார் திரு சண்முகம்.
பல சமயங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்ட யூத விழா ஒன்றில் வியாழக்கிழமை (ஏப்ரல் 11) திரு சண்முகம் பேசினார்.
சிங்கப்பூரில் உள்ள நிலவரம், உலகின் மற்ற பகுதிகளில் உள்ளதைவிட இதுவரை சற்று வேறுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய கிழக்கில் நடப்பவற்றைப் பார்த்தால் பல நிலைகளில் சோகமளிப்பதாகச் சொன்னார்.
உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் எதிராக வெறுப்புணர்வு அதிகரித்துள்ளதை திரு சண்முகம் சுட்டினார்.
“இத்தகைய பதற்றங்கள், பூசல்கள், விவாதங்களை சிங்கப்பூருக்குள் வருவதைத் தடுக்க நாங்கள் கடுமையாக செயல்பட்டு வந்துள்ளோம்.
“சமயங்கள், முன்னோர்கள், இனங்கள், பின்புலங்கள் எனச் சொல்லும்போது நாம் பல கலாசாரங்களைக் கொண்ட சமுதாயமாக விளங்குகிறோம்,” என்று திரு சண்முகம் கூறினார்.
சிங்கப்பூரில் யூதர்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் சமுதாயத்தில் துடிப்புமிக்க, மதிப்புமிக்க அங்கம் வகிப்பதாகவும் திரு சண்முகம் சொன்னார்.
காஸா போரால் சிங்கப்பூரில் சற்று தாக்கம் இருப்பதை உணர முடிந்தாலும் மற்ற நாடுகளில் நிலவுவதைவிட நல்லவேளையாக இங்கு பதற்றமும் உரசலும் குறைவு என்றார் அவர்.
சிங்கப்பூரில் சட்ட அமைப்பு, சட்டங்கள் சமமாகவும் நியாயமாகவும் அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதில் சிங்கப்பூர் கொண்டுள்ள கடப்பாடு, சமூகங்களுக்கு இடையே புரிந்துணர்வை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகள் ஆகியவை இதற்குக் காரணம் என்று திரு சண்முகம் கூறினார்.