மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி.
ஐ.பி.எல்., லீக் போட்டியில் சூர்யகுமார்(52 ரன்), பும்ரா(5 விக்.,) கைகொடுக்க மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை, பெங்களூரு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
பெங்களூரு அணிக்கு கோலி (3), ஜாக்ஸ் (8), மேக்ஸ்வெல் (0) ஏமாற்றினர். பின் இணைந்த ரஜத் படிதர் (50), கேப்டன் டுபிளசி அரைசதம் விளாசினர். பும்ரா வேகத்தில் டுபிளசி(61) வெளியேறினார்.
தொடர்ந்து மிரட்டிய பும்ரா பந்துவீச்சில் மஹிபால் (0), சவுரவ் சவுகான் (9) நடையைகட்டினர். வைஷாக்கை (0) அவுட்டாக்கி தனது 5வது விக்கெட்டை பெற்றார். ஆகாஷ் மத்வால் வீசிய கடைசி ஓவரில் வரிசையாக 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த தினேஷ் கார்த்திக் 22 பந்தில் அரைசதம் கடந்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது. கார்த்திக் (53), ஆகாஷ் தீப் (2) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் பும்ரா 5 விக்கெட் சாய்த்தார்.
சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு இஷான் கிஷான், ரோகித் சர்மா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. டாப்லே வீசிய 3வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டினார் இஷான். சிராஜ் வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த இஷான், மேக்ஸ்வெல் பந்தை சிக்சருக்கு அனுப்பி 23 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 101 ரன் சேர்த்த போது ஆகாஷ் தீப் பந்தில் இஷான் (69 ரன், 5 சிக்சர், 7 பவுண்டரி) அவுட்டானார்.
அடுத்து வந்த சூர்யகுமார்(செல்லமாக சூர்யா), ஆகாஷ் தீப் வீசிய 11வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன் குவித்தார். வில் ஜாக்ஸ் பந்தில் ரோகித் (38) அவுட்டானார். டாப்லே வீசிய 13வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த சூர்யகுமார் 17 பந்தில் அரைசதம் கடந்தார். இவர், 52 ரன்னில் (4 சிக்சர், 5 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அசத்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ஆகாஷ் தீப் பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். மும்பை அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பாண்ட்யா (21), திலக் வர்மா (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
மும்பை அணியில் கேரள விக்கெட் கீப்பர் பேட்டர் விஷ்ணு வினோத் 30, இடம் பிடித்திருந்தார். இடது முன்கையில் காயமடைந்த இவர், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக சவுராஷ்டிரா விக்கெட் கீப்பர் பேட்டர் ஹர்விக் தேசாய் 24, தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்முறையாக ஐ.பி.எல்., தொடருக்கு தேர்வான ஹர்விக், 27 ‘டி-20’ (691 ரன்), 40 ‘லிஸ்ட் ஏ’ (1341 ரன்), 46 முதல் தர (2658 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ஐ.பி.எல்., அரங்கில் இரண்டு முறை, ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்த 4வது பவுலரானார் பும்ரா. ஏற்கனவே ஜேம்ஸ் பால்க்னர், ஜெயதேவ் உனத்கட், புவனேஷ்வர் குமார் இப்படி சாதித்திருந்தனர். தவிர, பெங்களூருவுக்கு எதிராக 5 விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலரானார் பும்ரா. இதற்கு முன் 2015ல் சென்னையின் நெஹ்ரா 4/10 விக்கெட் வீழ்த்தியது அதிகபட்சமாக இருந்தது.