இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்னைக்கு உதவ அமெரிக்கா தயார்.
இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்னையை, இரு நாடுகளும் சுமுகமாக தீர்த்துக் கொள்ளும் என, நம்புவதாகவும், தேவைப்பட்டால் அதற்கு தான் உதவ தயாராக இருப்பதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியா – சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் அமைதி பேச்சு, பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பேச்சில், சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், மேலும் படைகள் குவிக்கப்படாது என இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. இந்நிலையில், வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களை நேற்று முன் தினம் சந்தித்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது.
இந்தியா சீனா இடையிலான பிரச்னை, மிகவும் தீவிரமாக உள்ளது. அதை, இரு நாடுகளும், சுமுகமாக தீர்த்துக் கொள்ளும் என நம்புகிறேன். உதவி தேவைப்பட்டால், அதை முழு மனதுடன் செய்ய, தயாராக உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், புதிய கப்பல்கள் கட்டும் பணி மற்றும் கடலோர கண்காணிப்பு ஆகியவற்றில், அமெரிக்காவுடன் இணைந்து, இந்தியா ஈடுபட்டு வருவதாகவும், அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.