தேர்தல்களைக் குறிவைத்து புதிய இடதுசாரிக் கூட்டணி – விமல், டலஸ், ரொஷான், தயாசிறி ஓரணியில்…
இடதுசாரிக் கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தெற்கு அரசியலில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் மேலதிக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, கம்யூனிஸ் கட்சி பிரதிநிதிகள், டலஸ் அழகப்பெரும, ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட தரப்பினர் இணைந்தே இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர் எனவும், தயாசிறி ஜயசேகரவும் இதில் இணையவுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே இந்தக் கூட்டணிக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இடதுசாரிக் கூட்டணியாக மே தினத்தை நடத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. விமல் தரப்பின் மே தினக் கூட்டம் கிருலப்பனையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் நபர் ஒருவரை ஆதரிப்பதா அல்லது தமது அணியில் ஒருவரைக் களமிறக்குவதா என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. எனினும், விஜயதாஸ ராஜபக்ஷவை இடதுசாரிக் கூட்டணியில் களமிறக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், இது பற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை.