வெள்ளை வேனில் ஒருவர் கடத்தல் : பொலிஸாரால் மீட்பு
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவரை தாக்கி , வெள்ளை வேனில் கடத்திய கட்டுநாயக்க விமான நிலையத்தின் வாடகை வண்டி சாரதிகள் இருவர் (11) கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல், மல்சிறிபுர பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய ஒரு இளைஞன் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்த இளைஞனை , கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சேர்ந்த இரண்டு வாடகை வண்டி சாரதிகள், வெள்ளை வேனில் வந்து , கட்டுநாயக்க 18ஆம் கட்டை அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து இந்த இளைஞனைத் தாக்கி , அவர்கள் வந்த வேனிலேயே கடத்திச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தை அவதானித்த பிரதேசவாசிகள் குழுவொன்று கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்ததையடுத்து, பொலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து , அந்த இடத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு கேமராக் காட்சிகளை ஆய்வு செய்த பின், வேனை அடையாளம் கண்டதோடு , வாகன ஓட்டிகள் தங்கியிருந்த ஆடியம்பலம், பீல்லவத்தை பகுதியில் உள்ள இரண்டு மாடி வாடகை வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.
அப்போது, கடத்தப்பட்ட இளைஞனை அடித்து அறையொன்றில் அவர்கள் கட்டிவைத்திருந்ததுடன் , கடத்தலை மேற்கொண்ட இரு சாரதிகளும் , கைதாகும் போது ஹெரோயின் போதை பொருளை பாவித்துக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கடத்தல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் எனவும், மற்றைய சாரதி ஹெட்டிபொல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வாடகை வண்டிகளை ஓட்டி வருவதுடன், அப்பகுதி முழுவதும் ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.