தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., உண்மையான தலைவர் கைக்கு வரப்போகிறது. அண்ணாமலை.
”தேர்தல் முடிவுக்கு பின், அ.தி.மு.க., உண்மையான தலைவர் கைக்கு வரப்போகிறது,” என, தேனியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
தேனி தொகுதி பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தினகரனை ஆதரித்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில், 2026ல் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம் இந்த லோக்சபா தேர்தலில் போடப்படுகிறது. பிரதமர் மோடி எவ்வாறு ஆட்சி செய்கிறார் என, அனைவருக்கும் தெரியும்.
முதல்வர் ஸ்டாலின், 33 மாதங்கள் ஆட்சியில் இருந்து விளம்பரப்படுத்திக் கொண்டு, நான் வேலை செய்துள்ளேன் ஓட்டளியுங்கள் என்கிறார்.
இவர் இந்தியாவை காப்பாற்ற என்னுடன் வாருங்கள் என்கிறார். தமிழகத்தை கோபாலபுரம் குடும்பத்திடம் இருந்து காப்பாற்ற பா.ஜ., தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. தினகரன் களத்திற்கு வர காரணம் தமிழகத்தில் புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக தான்.
ஸ்டாலின் தலைமையில் உள்ள தி.மு.க., பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரண்டும் ஒரு கட்சி தான். இரு கட்சியிலும் தொண்டர்கள் பிடிப்பாக இருக்கலாம்; ஆனால் தலைவர்கள் ஒன்று தான்.
லோக்சபா தேர்தலில் தினகரனை தோற்கடிக்க இருகட்சி வேட்பாளர்களும் ஒன்றிணைந்துள்ளனர். இங்கு அ.தி.மு.க.,வினர் ஓட்டு தினகரனுக்கு கிடைக்க போகிறது. இருகட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது போல் நாடகம் நடத்துகின்றனர்.
பழனிசாமி, ஸ்டாலினுக்கு தினகரனை பிடிக்காது. இவர் வெற்றி பெற்றால் தமிழகத்தில் அரசியல் மாறும் என்பது தெரியும்.
உச்ச நீதிமன்றம், 2006ல் முல்லை பெரியாறு அணையை 146 அடி உயர்த்தலாம். பலப்படுத்திய பின், 152 அடியாக உயர்த்தலாம் என்றது. அப்போது கேரள அரசு சட்டம் இயற்றி 136 அடியாக குறைத்தனர். தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க., வாய் திறக்கவில்லை.
மீண்டும் அப்போதைய மத்திய காங்., அரசுடன் இணைந்து பெரியாறு புலிகள் காப்பகத்திற்குள் மற்றொரு அணை கட்டுவது என, சட்டம் கொண்டு வந்தனர்.
அணை கட்டினால் கிடைக்கும் தண்ணீர் கிடைக்காது என்பதால், கருணாநிதி ஆர்ப்பாட்டம் செய்ய நினைத்தார். அப்போது காங்., ஜெய்ராம் ரமேஷ், 2ஜி வழக்கில் கைது செய்வோம் என மிரட்டியதால், தி.மு.க., போராட்டம் செய்யவில்லை.
காங்., – தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைந்தால், முல்லை பெரியாற்றில் வரும் தண்ணீரை நிறுத்தி விடுவர், புதிதாக அணை கட்டுவர். அதற்கு ஸ்டாலின் எதுவும் பேசமாட்டார்.
அன்று ஹிந்தியை திணித்தது, தமிழகத்திற்கு சரியாக வரி பங்கிட்டு கொடுக்காதது காங்., கட்சி. ஆனால், இன்று பிரதமர் மோடியை குற்றம்சாட்டுகின்றனர்.
2004ல் மத்திய அரசு, மாநில அரசு வரி பகிர்மானம் என்பது 30.5 சதவீதம். 2014ல் காங்., ஆட்சியை விட்டு செல்லும் போது 32 சதவீதம். தற்போது 42 சதவீதம்.
தேர்தலுக்கு பின் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இருக்காது. தொண்டர்கள் தினகரன் பின் நிற்க போகின்றனர். ஜூன் 4க்கு பின் இது நடக்கும். சட்டசபை தேர்தலில் தினகரன் எங்களுடன் இருந்திருந்தால், ஸ்டாலின் முதல்வர் ஆகி இருக்க மாட்டார்.
யார் எட்டப்பன் என்பதில் தொண்டர்கள் தெளிவாக புரிந்துள்ளனர். இந்த கூட்டணி 2026ல் அரசியல் மாற்றம் வரும் வரை இருக்கும்.
இவ்வாறு பேசினார்.