சிங்கப்பூர் பிரதமராக , லாரன்ஸ் வோங் பதவியேற்கவிருக்கிறார்.

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், மே மாதம் 15ஆம் தேதி, சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறார்.
சிங்கப்பூரின் தலைமைத்துவ மாற்றம் குறித்த இந்தத் தகவலைப் பிரதமர் அலுவலகம் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. 51 வயதாகும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், 13 ஆண்டுகளுக்குமுன் தமது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் குழுவிற்குத் தலைவராக அக்குழுவின் சக உறுப்பினர்கள் அவரைத் தேர்ந்தெடுத்தனர். அதற்கு முன்னதாக, திரு லீக்கு அடுத்தபடியாக நாட்டின் பிரதமர் பதவியை ஏற்பதற்குரியவரை அடையாளம் காண, முன்னாள் அமைச்சர் கோ பூன் வான், நான்காம் தலைமுறைத் தலைவர்களையும் இதர அமைச்சர்களையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
தாம் சந்தித்துப் பேசிய 19 பேரில் 15 பேர், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கையே தங்கள் முதல் தெரிவாகக் குறிப்பிட்டதாகத் திரு கோ தெரிவித்தார். சிங்கப்பூரின் தலைமைத்துவ மாற்றம் குறித்து நிலவிய நிச்சயமற்ற நிலை அதனால் ஒரு முடிவுக்கு வந்தது.
பதவியேற்பு நிகழ்ச்சி மே மாதம் 15ஆம் தேதி இரவு 8 மணிக்கு இஸ்தானாவில் நடைபெறும் என்று பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை (ஏப்ரல் 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இவ்வேளையில், தலைமைத்துவ மாற்றம் என்பது எந்தவொரு நாட்டிற்கும் முக்கியமான தருணம் என்று பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“லாரன்சும் நான்காம் தலைமுறைத் தலைவர்களும் மக்களின் நம்பிக்கையைப் பெறக் கடினமாக உழைத்துள்ளனர். குறிப்பாக, கொவிட்-19 கிருமிப் பரவலின்போது அவர்கள் அவ்வாறு உழைத்துள்ளனர்,” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“முன்னேறு சிங்கப்பூர் இயக்கத்தின் மூலம், அரசாங்கத்துக்கும் சமூகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், புதிய தலைமுறைக்கான தேசிய நடவடிக்கைகள் பட்டியலை உருவாக்கவும் சிங்கப்பூரர்கள் பலருடன் இணைந்து அவர்கள் பணியாற்றியுள்ளனர்,” என்று திரு லீ அப்பதிவில் கூறியுள்ளார்.
நான்காம் தலைமுறைத் தலைவர்கள் குழு, சிங்கப்பூர் நன்கு செயல்படுவதையும், தொடர்ந்து முன்னேறுவதையும் உறுதிசெய்யக் கடப்பாடு கொண்டிருப்பதாகக் கூறிய பிரதமர் லீ, மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை இணைந்து உருவாக்குவதற்குத் துணைப் பிரதமர் வோங்கிற்கும் அவரது குழுவிற்கும் முழுமையான ஆதரவு நல்கும்படி சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.