ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி 25 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் வீழ்ந்தது.
ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி 25 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் வீழ்ந்தது. மின்னல் வேக பேட்டிங்கை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட், 41 பந்தில் 102 ரன் விளாசினார்.
இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 7வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த 30 வது லீக் போட்டியில் பெங்களூரு அணி, ஐதராபாத்தை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் டுபிளசி பீல்டிங் தேர்வு செய்தார்.
ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. டாப்லே வீசிய இரண்டாவது ஓவரில் ஹெட், ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, கடைசி பந்தை அபிஷேக் சிக்சருக்கு அனுப்ப, 20 ரன் எடுக்கப்பட்டன. அடுத்து வந்த யாஷ் தயாள் ஓவரில் 2 சிக்சர், 1 பவுண்டரி விளாசிய ஹெட், 20 வது பந்தில் 50 ரன்களை கடந்தார்.
ஏழாவது ஓவரை வீசினார் வில் ஜாக்ஸ். இதில் மீண்டும் மிரட்டிய ஹெட், 2 சிக்சர், 1 பவுண்டரி என தொடர்ந்து அசத்தினார். ஐதராபாத் அணி 7.1 ஓவரில் 103 ரன்கள் எடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 108 ரன் (48 பந்தில்) சேர்த்த போது அபிஷேக் (34) அவுட்டானார்.
வைஷாக் வீசிய போட்டியின் 12 வது ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த ஹெட், 39 வது பந்தில் சதம் எட்டினார். ஐ.பி.எல்., அரங்கில் இவர் அடித்த முதல் சதம் இது. ஹெட் 41 பந்தில் 102 ரன் எடுத்த போது, பெர்குசன் பந்தில் டுபிளசியிடம் ‘கேட்ச்’ கொடுத்து அவுட்டானார். இதன் பின் வந்த கிளாசன், 23 வது பந்தில் அரைசதம் எட்டினார். ஐதராபாத் அணி 15 ஓவரில் 205/2 ரன் எடுத்தது. பெர்குசன் வீசிய பந்தை (16.2 ஓவர்), கிளாசன் 106 மீ., துாரத்துக்கு அனுப்ப, மைதானத்தின் மேற்கூரையில் சென்று விழுந்தது. இவர் 67 ரன் எடுத்த போது (31 பந்து), பெர்குசன் ‘வேகத்தில்’ வீழ்ந்தார்.
கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமத், தன் பங்கிற்கு ரன் மழை பொழிந்தார். டாப்லே வீசிய 19 வது ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்சர் என விளாச, 25 ரன் எடுக்கப்பட்டன.
கடைசி ஓவரில் மார்க்ரம், தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, சமது ஒரு சிக்சர் அடித்து மிரட்டினார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 287 ரன் குவித்தது. சமது (37 ரன், 10 பந்து), மார்க்ரம் (32 ரன், 17 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர்.
கார்த்திக் ஆறுதல்
பின் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு டுபிளசி, கோலி ஜோடி வேகமாக ரன் சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு 6.1 ஓவரில் 80 ரன் சேர்த்த போது கோலி (42) அவுட்டானார். இதன் பின் வந்த வில் ஜாக்ஸ் (7), படிதர் (9) அடுத்தடுத்து அவுட்டாக, டுபிளசி 62 ரன் எடுத்து திரும்பினார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக். 23 வது பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 83 ரன் எடுத்து வெளியேறினார்.
பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 262 ரன் எடுத்து தோல்வியடைந்தது. ஐதராபாத் அணி சார்பில் நேற்று 22 சிக்சர் அடிக்கப்பட்டன. ஐ.பி.எல்., அரங்கில் ஒரு போட்டியில் அதிக சிக்சர் அடிக்கப்பட்ட போட்டியாக இது அமைந்தது. இதற்கு முன் பெங்களூரு, 21 சிக்சர் (2013) அடித்து இருந்தது.
ஐ.பி.எல்., அரங்கில் அதிவேக சதம் அடித்த வீரர்களில் நான்காவது இடம் பெற்றார் டிராவிஸ் ஹெட். நேற்று இவர் 39 பந்தில் சதம் கடந்தார். முதல் மூன்று இடத்தில் கெய்ல் (30 பந்து, 2013), யூசுப் பதான் (37, 2010), மில்லர் (38, 2013) உள்ளனர்.
ஐதராபாத் அணி நேற்று 15 ஓவரில் 205/2 ரன் எடுத்தது. ஐ.பி.எல்., அரங்கில் அதிவேகமாக 200 ரன்கள் எடுக்கப்பட்ட வரிசையில் இது மூன்றாவது இடம் பிடித்தது. முதல் இரு இடத்தில் பெங்களூரு (14.1 ஓவர், எதிரணி-பஞ்சாப், 2016), ஐதராபாத் (14.4 ஓவர், மும்பை, 2024) அணிகள் உள்ளன.
நேற்று 287 ரன் எடுத்த ஐதராபாத் அணி, ஐ.பி.எல்., வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்து சாதனை படைத்தது. இதற்கு முன் மும்பைக்கு எதிராக இத்தொடரில் ஐதராபாத் 277/3 ரன் எடுத்து சாதித்து இருந்தது. இந்த வரிசையில் 272 ரன் கோல்கட்டா அணி (டில்லி) மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஒட்டுமொத்த ‘டி-20’ அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த அணிகளுக்கான பட்டியலில் ஐதராபாத் அணி (287/3) இரண்டாவது இடம் பெற்றது. முதலிடத்தில் நேபாளம் (314/3, எதிர்: மங்கோலியா, 2023) உள்ளது.