வவுனியாவை இன்று வந்தடைந்த அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு மக்கள் அஞ்சலி.
நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று வவுனியாவை வந்தடைந்த நிலையில் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வடக்கு – கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள நிலையில் இன்று வவுனியாவை வந்தடைந்தது.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டப் பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக ஊர்தி நிறுத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பொங்குதமிழ் நினைவுத்தூபி, பண்டார வன்னியன் நினைவுச் சதுக்கம், கோவில்குளம், ஈச்சங்குளம், வவுனியா வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் சென்றதுடன், அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத் தலைவி கா.ஜெயவனிதா ஈகைச்சுடரை ஏற்றி வைத்ததுடன், தாய்மாரால் மலர்மாலை அணிவித்ததையடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.