அநுரவின் ஆட்சியில் புதிய அரசமைப்பு உறுதி – மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என நளிந்த தெரிவிப்பு.

மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“அரசமைப்பு என்பதை பலவந்தமாகத் திணிக்க முடியாது. அது தொடர்பில் மக்கள் மத்தியில் கலந்துரையாடல் மற்றும் மக்களின் ஆதரவு அவசியம். ஆனால், இலங்கையில் சோல்பரி யாப்பு, 72 குடியரசு யாப்பு மற்றும் 78 இல் புதிய அரசமைப்பு என்பன மக்களிடம் முறையாகக் கலந்துரையாடப்படாமல் கொண்டுவரப்பட்டவையாகும்.
தென்னாபிரிக்காவில் அரசமைப்பு முன்வைக்கப்பட்டபோது மக்களிடம் பரந்துபட்டளவில் கலந்துரையாடப்பட்டது. மன்னர் ஆட்சி நடைபெற்ற நேபாளத்தில்கூட மக்கள் விருப்பத்துக்கமையவே புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட்டது. எனவே, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது நாடாளுமன்ற ஆட்சிக் காலத்துக்குள் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசமைப்பு முன்வைக்கப்படும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி, நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தைப் பகிரும் யோசனையும் உள்ளது.” – என்றார்.