பரபரப்புக்கு மத்தியில் வவுனியாவில் நாளை கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில ஆராயப்படவுள்ளது.
திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களைக் கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
சிவஞானம் சிறீதரன் எம்.பி. மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பிக்கள் ஆகியோர் பொது வேட்பாளர் விடயத்தைச் சாதகமாகப் பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
இந்நிலையில், இது குறித்த உறுதியான முடிவும் இந்தக் கூட்டத்தில் எட்டப்படவுள்ளது.