தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவு இல்லம்..!

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் செப்டம்பர் 25 ஆம் தேதி மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நேற்று எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின்னர், அவருடைய உடல் நேற்று தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய, எஸ்.பி.பி சரண், எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவு இல்லம் கட்டப்படும் என்றும் இதுகுறித்து அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பில் இருந்து தன் தந்தைக்கு கொடுக்கப்பட்ட மரியாதைக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட காவல்துறையுடன் ஆலோசித்து மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.