8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியடைந்த சென்னை அணி.
ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியடைந்தது. இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. லக்னோவில் நடந்த லீக் போட்டியில் லக்னோ, ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த சென்னை அணி வீரர்கள் துவக்கத்தில் தடுமாறினர். மொசின் கான் ‘வேகத்தில்’ ரச்சின் ரவிந்திரா (0) போல்டானார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (17) நிலைக்கவில்லை. ரகானே (36) ஓரளவு கைகொடுத்தார். ஷிவம் துபே (3), சமீர் ரிஸ்வி (1) சோபிக்கவில்லை.
யாஷ் தாகூர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜடேஜா, மொசின் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பி 34 பந்தில் அரைசதம் கடந்தார். பிஷ்னோய் வீசிய 18வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் பறக்கவிட்ட மொயீன் அலி (30), அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். மொசின் கான் வீசிய 19வது ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய தோனி, யாஷ் தாகூர் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார்.
சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்தது. ஜடேஜா (57), தோனி (28) அவுட்டாகாமல் இருந்தனர். லக்னோ சார்பில் குர்னால் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு குயின்டன் டி காக், கேப்டன் ராகுல் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ராகுல் அரைசதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த குயின்டன் 41 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 134 ரன் சேர்த்த போது முஸ்தபிஜுர் ‘வேகத்தில்’ குயின்டன் (54) வெளியேறினார். அபாரமாக ஆடிய ராகுல் (82), பதிரானாவிடம் சரணடைந்தார்.
பின் இணைந்த பூரன், ஸ்டாய்னிஸ் ஜோடி கைகொடுத்தது. துஷார் தேஷ்பாண்டே பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பூரன் வெற்றியை உறுதி செய்தார். லக்னோ அணி 19 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 180 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பூரன் (23), ஸ்டாய்னிஸ் (8) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் முஸ்தபிஜுர், பதிரானா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.