மைத்திரிபாலவுடன் நீதி அமைச்சர் வலம் வருவதற்குக் கடும் எதிர்ப்பு! – துமிந்த எம்.பி. போர்க்கொடி.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் உட்பட நீதிமன்றத்தில் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நிகழ்வுகளில் பங்கேற்பது ஏற்புடையது அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் சிறப்புப் பேச்சாளராக விஜயதாஸ ராஜபக்ஷ பங்கேற்றிருந்தார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் ஜனன தின நிகழ்விலும் மைத்திரிபால சிறிசேனவுடன் வருகை தந்து அவர் அருகில் அமர்ந்திருந்தார்.
இந்நிலையிலேயே சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ஆளுங்கட்சி பக்கம் இருப்பதால்தான் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர உள்ளிட்டவர்கள் கட்சியின் இருந்து நீக்கும் முடிவை மைத்திரிபால சிறிசேன எடுத்தார். ஆனால், அரசில் அமைச்சுப் பதவியை வகிக்கும் விஜயதாஸ ராஜபக்ஷ சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்படுகின்றார். இதில் உள்ள நியாயத்தன்மை என்ன?
மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் குறித்து மட்டும் 400 வரையான வழக்குகள் உள்ளன. அண்மையில்கூட சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு சிக்கலில் மாட்டினார். இவ்வாறு நீதிமன்றத்தில் பல வழக்குகள் உள்ள நபரின் அழைப்பையேற்று நீதி அமைச்சர் நிகழ்வுகளில் அதுவும் அவருடன் பங்கேற்பது ஏற்புடையதா? இதனால் நீதியின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் எழக்கூடும்.
விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. எனவே, அவர் இப்படியான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.” – என்றார்.