தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சி முட்டாள்தனமானது! – அரவிந்தகுமார் கடும் எதிர்ப்பு.

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற யோசனை நகைச்சுவையானது. அவ்வாறான முயற்சிக்கு நான் ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டேன்.”
இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் நகைச்சுவையானது. தமிழர்கள் ஓரணியில் உள்ளனர் என்ற தகவலை மட்டுமே அதன்மூலம் வழங்கலாம். மாறாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்ப் பொது வேட்பாளரால் ஆட்சிக்கு வரமுடியாது. எனவே, முடியாதவொரு விடயத்துக்கு எதற்காக முயற்சி எடுக்க வேண்டும்? இந்த யோசனையை நான் கண்டிக்கின்றேன். ஆதரவு வழங்கப்போவதும் இல்லை.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுபவரின் ஆதரவு தமிழ் மக்களுக்கு அவசியம். சிலவேளை அனைத்து தமிழர்களும் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்தால் அது தேவையற்ற பிரிச்சினைக்கு வழிவகுக்கும். எனவே, இது முட்டாள்தனமான முயற்சியாகும்.” – என்றார்.