பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்சக்கள் மீது பழி சுமத்தாதீர்கள்! – நாமல் கடும் சீற்றம்.
“நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்ச க்கள்தான் காரணம் என்று எதிரணியினர் பழி சுமத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.”
இவ்வாறு வலியுறுத்தினார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“கொரோனாத் தொற்று மற்றும் வெளிநாடுகளுக்கிடையிலான மோதல்களால் இலங்கையில் மட்டுமல்ல பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.
எதிரணியினரும், சில வெளிநாட்டுத் தூதரகங்களும் இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி மொட்டு அரசுக்கு எதிராக எதிரணியின் ஆதரவாளர்களான ஒரு தொகுதி மக்களைத் திசைதிருப்பினர். போராட்டம் என்ற பெயரில் அந்தக் கூட்டத்தினர் நாட்டில் பாரிய தொடர் வன்முறைகளுக்குச் சதித்திட்டம் தீட்டினர். அந்த நிலைமை நாட்டில் ஏற்படக்கூடாது என்பதை உணர்ந்தே ராஜபக்சக்கள் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகினார்கள்.
எனினும், மொட்டு அரசின் ஆட்சிதான் தற்போதும் தொடர்கின்றது. எமக்கான மக்கள் ஆதரவில் வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை. எந்தத் தேர்தல் நடந்தாலும் மொட்டுக் கட்சிதான் வெற்றிவாகை சூடும்.” – என்றார்.