‘எங்களை சீண்டினால் அடுத்த அடி மிகவும் பலமாக இருக்கும்’,ஈரான் வெளியுறவு அமைச்சர்.
ஈரான் எல்லைக்குள் இஸ்ரேல் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர், ‘அது குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டு’ என்று கூறியுள்ளார். மேலும், ‘எங்களை சீண்டினால் அடுத்த அடி மிகவும் பலமாக இருக்கும்’ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேற்காசியா பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் ஆதரவு ஹொஸ்பெல்லா பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின்போது, சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துாதரகம் தாக்கப்பட்டது. இதைஅடுத்து, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.
அதன்படி, சமீபத்தில் ஒரே நாளில், 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக ஈரான் தாக்குதலில் ஈடுபட்டது.
அதில், 99 சதவீதத்தை வீழ்த்தியதாக, இஸ்ரேல் கூறியது.
இதையடுத்து, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்தது. இந்நிலையில், ஈரானின் இஸ்பகான் பகுதியில், நேற்று முன்தினம் சில ட்ரோன்கள் பறந்ததாகவும், அவற்றை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் செய்திகள் வெளியாகின.
இவை குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹோசைன் அமிராப்தோலாஹியான் கூறியுள்ளதாவது:
அவை எதுவும் பெரிய சம்பவம் இல்லை. ஏதோ சில ட்ரோன்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது. இது எங்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் போன்றவை.
இந்த ட்ரோன்களை இஸ்ரேல் அனுப்பியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதனால், இதில் எதையும் உறுதியாக கூற முடியாது. அதே நேரத்தில், ஏதாவது விஷமத்தனத்தில் இஸ்ரேல் இறங்கினால், எங்களுடைய அடுத்த அடி, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியதாக இருக்கும்.
இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரான் ஆதரவு ஹஷீத் அல் — சாஹப் என்ற பயங்கரவாத அமைப்பு ஈராக்கில் இருந்து செயல்படுகிறது.
அந்த அமைப்புக்கு சொந்தமான ஈராக்கின் கால்சோவில் உள்ள முகாம் மீது ஏவுகணை தாக்கல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஒருவர் உயிரிழந்தார்; எட்டு பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக இஸ்ரேல் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.