செய்தி வாசித்தபோது மயங்கி விழுந்த பெண் அறிவிப்பாளர்
தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டு இருந்த பெண் மயங்கிச் சரிந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவில் நிகழ்ந்தது.
இந்திய அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் வங்காள மொழிப் பிரிவில் பணியாற்றி வருபவர் லோபமுத்ரா சின்ஹா.
இந்நிலையில், பணியின்போது தான் மயங்கிச் சரிந்தது குறித்து திருவாட்டி லோபமுத்ரா தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“செய்தி வாசித்துக்கொண்டிருந்தபோது ரத்த அழுத்தம் திடீரென மிகவும் கீழிறங்கியது. செய்தி வாசிப்பதற்கு முன்னரே எனக்கு உடல்நிலை சரியில்லை. தண்ணீர் அருந்தினால் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனாலும், இடையில் நீர் அருந்த முடியாதபடி அந்த வேலை இருந்தது,” என்று அவர் விளக்கினார்.
நேரம் செல்லச் செல்ல லோபமுத்ராவின் நிலைமை மோசமானது. குறிப்பாக, வெயில் குறித்த செய்தி அங்கத்தின்போது, கண்ணைக் கட்டிக்கொண்டு வரவே, மயங்கி விழுந்தார்.
“என் பேச்சு குழறியது. கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை மங்கி, இறுதியில் தொலைவுரைகாட்டி (teleprompter) கண்ணுக்குத் தெரியாமலேயே போனது,” என்று வங்காள மொழியில் அவர் பகிர்ந்துகொண்டார்.
இதனையடுத்து, அவர் விரைந்து குணமடைய பலரும் வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மேற்கு வங்க மாநிலத்தில், குறிப்பாக அதன் தென்பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. பல இடங்களில் 40 டிகிரி செல்சியசுக்குமேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.