இரண்டு ஜப்பானிய ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் அதிகாரி பலி.
பசுபிக் பெருங்கடலில் இரவு பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஜப்பானிய ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டோக்கியோவிலிருந்து தெற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இசு தீவுகளுக்கு அருகே இரட்டை என்ஜின் கொண்ட ஹெலிகாப்டர்கள் நீர்மூழ்கி எதிர்ப்புத் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர்களின் சிதைவுகள் மற்றும் விமானத் தரவுகள் அடங்கிய பாகங்கள் ஒன்றுக்கொன்று அருகாமையில் காணப்பட்டதாகவும், விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானிய ஹெலிகொப்டர்கள் விபத்துக்குள்ளானதை வேறு தரப்பினரின் தாக்குதலாக சந்தேகிக்க முடியாது எனவும், அப்போது அந்த பகுதியில் வேறு கப்பல்களோ, விமானங்களோ இல்லை எனவும் ஜப்பான் கடற்படை தெரிவித்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.